கோவை மாநகரில் கோயிலில் படுத்து கிடந்த சிறுத்தை.. ஒரே வாரத்தில் 2வது முறை.. பொதுமக்கள் அச்சம்
கோவை: கோவை சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலைக்குள் கடந்த வாரம் சிறுத்தை ஒன்று வலம் வந்தது. அது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. நேற்று முன்தினம் கண்ணம்பாளையம் பகுதியில் அதிகாலையில் கோயில் அருகே சிறுத்தை உறங்கி கொண்டு இருந்துள்ளது. இதை பார்த்த காவலாளி விசில் ஊதியதால், அந்த சிறுத்தை அங்கிருந்த சென்றுவிட்டது. கோவை மாநகருக்கே சிறுத்தை வந்துள்ளதை பார்த்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாநகரம் என்பது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள பெரிய நகரம் ஆகும். கேரளாவின் நுழைவு வாயிலாகவும் பாலக்காடு கனவாயை ஒட்டியுள்ள பகுதியாகவும் கோவை இருக்கிறது. கோவை மாநகரில் தென்மேற்கு தொடங்கி வடமேற்கு பகுதி வரை மேற்கு தொடர்ச்சி மலை நீண்டு செல்கிறது. குறிப்பாக மதுக்கரை முதல் தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம், மருதமலை, காரமடை, மேட்டுப்பாளையம் என மேற்கு தொடர்ச்சி மலை நீண்டு செல்கிறது. இந்த பகுதிகள் எல்லாம் வனவிலங்குகள் நிறைந்த பகுதியாகும். அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவது இயல்பான ஒன்றாக இருக்கிறது.

மதுக்கரை வனம்
அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப் பகுதியில் எப்போதும் வன விலங்குகளின் நடமாட்டம் காணப்படும். இங்கு தான் கேரளாவின் பாலக்காடு கணவா உள்ளது. இந்த ஒரு கணவாய் இல்லை என்றால், ரயில் போக்குவரத்து என்பதும், எளிதான சாலை போக்குவரத்து என்பது கேரளாவின் பெரும்பாலான ஊர்களுக்கு ரயில் போக்குவரத்து சாத்தியமே இல்லை.. கேரளாவிற்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இது கணவாய் என்பதுடன், அடர்ந்த வனப்பகுதி என்பதால், யானைகள், புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்பட பல்வேறு வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்லும்.
பாலக்காடு கணவாய்
முன்பெல்லாம் அடிக்கடி யானைகள் பாலக்காடு ரயில் பாதையில் கடந்து சென்று விபத்தில் சிக்கும். இப்போதும் பாலம் இருப்பதால் அந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படுவது இல்லை.. வனவிலங்குகள் அங்கு கடந்து சென்று வந்த நிலையில், அவ்வப்போது ஊருக்குள் வரும். குறிப்பாக யானைகள், சிறுத்தைகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருவது வழக்கம். ஆனால் அவை மதுக்கரை, தொண்டாமுத்தூர், காரமடை வனப்பகுதிகளில் தான் இருக்கும்.
ஆனால் முதல் முறையாக கோவை மாநகருக்கே அண்மையில் சிறுத்தை வந்துவிட்டது. கடந்த நவம்பர் 12ம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று கோவை மாநகரின் நுழைவுப்பகுதியான 15 கி.மீ தொலைவில் உள்ள இருகூர் பகுதிக்கு வந்திருக்கிறது, பின்னர் நொய்யல் ஆற்றுப்பகுதிக்கு அருகில் உள்ள தனியார் மோட்டார் கம்பெனிக்குள் நுழைந்தது., பின்னர் அந்த பகுதிக்குள் உலா வந்த சிறுத்தை அங்கிருந்து வெளியே சென்றது, அப்போது இரவு பணியில் இருந்த காவலர் சிறுத்தை அங்கிருந்து ஓடி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வனத்துறை விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்று தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து சிறுத்தை இருக்கும் இடத்தை அடையாளம் காண முயன்றனர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை.
கோயிலில் உறங்கிய சிறுத்தை
இந்த நிலையில் முதலில் வந்து சென்ற தொழிற்சாலைக்கு எதிரே உள்ள ஒரு ஓட்டல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி அளவில் சிறுத்தை நடமாடியிருக்கிறது. மேலும் அங்குள்ள சாய் கிருபா அவன்யூ விநாயகர் கோவிலில் சிறுத்தை படுத்து உறங்கியிருக்கிறது. அதை பார்த்து அங்கிருந்த காவலாளி அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் வேகமாக விசில் ஊதினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சிறுத்தை அங்கிருந்து சென்றது. அந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது.
பொதுமக்கள் அச்சம்
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் கண்ணம்பாளையம் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications