சென்னையில் முதல்முறை.. அசத்தலான வசதியுடன் ரெடியாகும் மாடிப்பூங்கா.. வேறலெவல் திட்டம்
சென்னை ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே மாநகராட்சி சார்பில் முதல் முறையாக மாடிப்பூங்கா அமைக்கப்படுகிறது.
சென்னை: சென்னை ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே மாநகராட்சி சார்பில் முதல் முறையாக அசத்தலான வசதிகளுடன் பசுமையுடன் கூடிய மாடி பூங்கா அமைக்கும் பணி நடைபெறுகிறது,
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேலும் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படுகிறது. இதேபோல் மயானபூமிகள் மேம்பாடு உள்ளிட்ட பல புதிய மேம்பாட்டு திட்டங்கள் சென்னையில் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழக முதல்வர் ஸ்டாலின், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னையில் 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயானபூமிகள், 16 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் புராதன சின்னமான விக்டோரியா பொதுக் கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளித்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

எப்படி அமைகிறது
பூங்காக்கள் எப்படி அமைய உள்ளன? மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்துகின்ற வகையில் சிறந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையிலும் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.புதுமையான ஓவியங்களுடன் கூடிய சுவர், கழிப்பறைகளுடன் கூடிய பாதுகாப்பு அறை, கிரில் கூழாங்கற்களுடன் கூடிய 8 வடிவிலான பாதை, யோகா செய்யுமிடம், அமரும் இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்டுள்ளதாக பூங்காக்கள் அமைகிறது. கால்பந்து, பூப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் உள்ளிட்ட இளைஞர்கள் பங்கேற்று தங்கள் வாழ்வில் வெற்றி பெறுவற்கான பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் விளையாட்டுத் திடல்கள் அமைகிறது.

கடற்பாசி பூங்கா
செயற்கை குளம் மற்றும் மழைத்தோட்டங்களுடன் கடற்பாசி பூங்கா அமைகிறது. இதன் மூலம் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்துப் போராடவும், மழைநீரை நிலத்தில் செலுத்துவதன் மூலம் நிலத்தடிநீரை சேமித்திடவும் கடற்பாசி பூங்காக்கள் வாய்ப்பாக இந்த பூங்கா அமையும். எரிபொருள் தகனத்தை எல். பி. ஜி தகனமாக அமைத்தல், தேவையான அடிப்படை வசதிப் பணிகள் மேற்கொள்ளுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை அமைப்புகளுடன் உருவாக்குதல், நவீன வசதிகளுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிப்பு எற்பாடுகள், நினைவுக்கூடங்கள், தியான அறைகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.

அருங்காட்சியகம்
இதேபோல் விக்டோரியா பொது மண்டபத்தினைப் பாதுகாத்து புத்துயிர் அளித்திடும் வகையில் புனரமைத்து பாரம்பரிய சின்னத்தைப் பாதுகாக்கும் திட்டமும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் தரைத்தளமானது நிரந்தரமான மற்றும் சுழல் கண்காட்சி அருங்காட்சியமாக மாற்றப்படுகிறது. 3 பக்க காட்சியகங்கள், பார்வைக்கூடம் மற்றும் ஒரு அரைவட்ட காட்சியகம் அமையும். தரைத்தளத்தில் தனி நுழைவாயிலுடன் அருங்காட்சியகத்தின் அலுவலகம் அமையும். மேலும் அருங்காட்சியகத்தை ஒட்டி தேநீர் கூடமும் அமைகிறது. முதல் தளத்தில் அருங்காட்சியகத்தின் பார்வைக் கூடத்தின் தொடர்ச்சியில் ஒரு ஓய்வு அறை, முக்கியப் பிரமுகர்களுக்கான கூடம் மற்றும் பல்நோக்குப் பயன்பாட்டிற்கான மண்டபம் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமையும். வெளிப்புற வளாகத்தில் சிறிய பசுமைப் புல்வெளித் தோட்டம், வெளிப்புற அருங்காட்சியகம் மற்றும் செயல்திறன் அரங்கிற்கான ஏற்பாடுகள் உருவாக்கப்படும். கூடுதலாக முகப்பில் ஒளிரூட்டும் வெளிச்சத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட உள்ளது.,

சென்னை ராயபுரம்
இதேபோல் சென்னை ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே சுமார் 2.13 கோடி ரூபாய் மதிப்பில் மாடி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இது சுமார் 6,865 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இந்த பூங்காவில் எல்.ஈ.டி விளக்குகள், குழந்தைகள் விளையாடும் இடம், பொது மக்கள் அமருவதற்கான இட வசதி, யோகா தியானம் செய்வதற்கு தனி இடம், நடப்பதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட நடைபாதை வசதி மற்றும் நவீன கழிப்பறை வசதி உள்ளிட்டவை இடம்பெறுகிறது.

மாடிப்பூங்காவின் வசதிகள்
மக்கள் ஏறி, இறங்க சாய்தள நடைபாதை வசதி அமைக்கப்படுகிறது. சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றுநீள நடைபாதை உள்ளிட்ட அம்சங்களுடன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவுபெற்று பூங்கா ஏப்ரல் மாதத்திற்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மாடிப்பூங்கா அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். மாடிப்பூங்காக்கள் சென்னை முழுவதும் அமைக்கப்பட வேண்டிய சிறப்பான திட்டம் என்று பொதுமக்கள் கூறுகின்றன. சென்னையில் ஒவ்வாரு வார்டிலும் விளையாட்டு வசதிகள் மற்றும் நடைபாதை வசதிகளுடன் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications