எல்.ஐ.சி-க்கு பேரிடி.. ஒன்றரை மாதத்தில் ரூ.84,000 கோடி இழப்பு! பங்குச் சந்தை சரிவால் கடும் பாதிப்பு!
சென்னை: பங்குச் சந்தையில் ஏராளமான நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு ரூ.84,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான LIC, முதலீடு செய்த 330 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் அந்த நிறுவனத்துக்கு கடந்த ஒன்றரை மாதத்தில் ரூ.84,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவு, அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு (LIC) பேரிடியைக் கொடுத்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களில் எல்.ஐ.சியின் போர்ட்போலியோ மதிப்பு சுமார் ரூ.84,000 கோடி சரிந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட்டாளரான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) 7 நாடுகளில் தனது சொத்துகளை வைத்துள்ளது. பங்குச் சந்தையில் பல்வேறு நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளது எல்.ஐ.சி. இதன் மூலமும் எல்.ஐ.சி வருமானம் ஈட்டுகிறது. இந்நிலையில் தான் கடந்த ஒன்றரை மாதங்களில் எல்.ஐ.சிக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 2024 காலாண்டின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எல்ஐசியின் பங்குகளின் மதிப்பு ரூ.14.72 டிரில்லியனாக இருந்தது. தற்போதைய விலைகளில் (பிப்ரவரி 18, 2025), இந்த பங்குகளின் மதிப்பு ரூ.13.87 டிரில்லியனாக சரிந்துள்ளது. சந்தை மதிப்பில் 5.7% சரிந்துள்ளது. அதாவது இது ரூ.84,247 கோடி இழப்பாகும்.
டிசம்பர் 2024 காலாண்டில் எல்ஐசி 1 சதவீத புள்ளிக்கு மேல் (ppt) பங்குகளை வைத்திருக்கும் 330 நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனத்தில் (சந்தை மூலதனம்) 66 சதவீதத்தைக் கொண்டிருந்தன.
இதுவரை ITC (ரூ.11,863 கோடி), லார்சன் & டூப்ரோ (ரூ.6,713 கோடி) மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (ரூ.5,647 கோடி) பங்குகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான சரிவு ஏற்பட்டதே, எல்.ஐ.சி நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கு முக்கியக் காரணம். இந்த பங்குகள் LIC-யின் மொத்த பங்கு பதிப்பில், 29 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
மொத்தம் 26 நிறுவனங்களில், எல்ஐசியின் சந்தை மதிப்பு ரூ.1,000 கோடி சரிவை சந்தித்துள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி, அதானி போர்ட்ஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகியவற்றில் காப்பீட்டு நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,000 கோடியிலிருந்து ரூ.4,000 கோடி வரை குறைந்துள்ளது.
தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்க வரி விதிப்பு காரணமாக, கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications