"விதிமீறல்".. திமுகவில் இருந்து 56 நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்.. துரைமுருகன் ஆக்சன்.. என்ன காரணம்?
சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக திமுகவில் இருந்து 56 பேர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு ஆளும் திமுக தரப்பு தீவிரமாக தயாராகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் ஆன்லைன் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

திமுக போட்டி
இதில் சில நகராட்சி, மாநகராட்சிகளில் திமுகவில் இருந்து கூட்டணி கட்சிகள் பிரிந்து தனியாக போட்டியிடுகிறது. கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை என்பதால் உள்ளூர் அளவில் மட்டும் சில இடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆங்காங்கே தனியாக போட்டியிடுகின்றன. மற்றபடி பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. பெரிய கூட்டணியோடு போட்டியிடுவதால் திமுகவில் இந்த முறை சில நிர்வாகிகளுக்கு இடம் கிடைக்கவில்லை.

சுயேச்சை போட்டி
நகராட்சி, மாநகராட்சி அளவில் வார்டுகளில் போட்டியிட சில திமுக நிர்வாகிகளுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு சென்றுவிட்டது இதனால் வாய்ப்பு கிடைக்காத திமுக நிர்வாகிகள் சுயேட்சைகளாக சில இடங்களில் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர்களையும், அதன் கூட்டணி வேட்பாளர்களையும் எதிர்த்து திமுக நிர்வாகிகள் சிலர் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர்.

இடம் கிடைக்கவில்லை
ஏற்கனவே இப்படி நிர்வாகிகள் யாரும் சுயேட்சையாக போட்டியிட கூடாது என்று திமுக தலைமை எச்சரிக்கை விடுத்து இருந்தது. கட்சி முடிவை ஏற்று திமுக நிறுத்தும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இதை மீறி திமுக நிர்வாகிகள் 56 பேர் வெவ்வேறு மாவட்டங்களில் சுயேட்சையாக போட்டியிட்டனர். திருவொற்றியூர் ஆதி குருசாமி உள்பட 56 பேர் பல இடங்களில் போட்டியிட்டனர்.

நடவடிக்கை
தஞ்சை, சேலம், தருமபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இவர்கள் திமுக வேட்பாளர்களையும், திமுக கூட்டணி வேட்பாளர்களையும் எதிர்த்து போட்டியிட்டனர். இந்த நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 56 பேர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக நீக்கம்
கட்சியின் உத்தரவை மதிக்கவில்லை. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்சி உத்தரவை மீறி சுயேட்சையாக இவர்கள் போட்டியிட்டுள்ளனர். அதனால் திருவொற்றியூர் ஆதி குருசாமி உள்பட 56 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். திமுக நிர்வாகிகள் இடையே இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications