இவ்வளவு கோடியா..! தேர்தலில் களமிறங்கும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மனைவி.. சொத்து மதிப்பு என்ன?
சென்னை: ஊராக உள்ளாட்சி தேர்தலில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி போட்டியிட உள்ளார். இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருந்த 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. கள்ளக்குறிச்சி, தென்காசி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறது. தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிட உள்ளது. திமுக கூட்டணியில் விசிக தொடரும் என்று அறிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்
பொதுவாக ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் கட்சிகள் தங்களின் அடிமட்ட பலத்தை அதிகரிக்கும் வகையில் தனியாக நிற்பது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு ஊரிலும் புகழ்பெற்று விளங்கும் நபர்கள், பிரபலங்கள் தனித்து சுயேட்சையாக போட்டியிடுவதும் வழக்கம். உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு இப்படி பலர் தங்கள் மனுக்களை தாக்கல் செய்வது வழக்கம்.

பங்காரு அடிகளாரின் மனைவி
இந்த நிலையில்தான் மேல்மருவத்தூர் அருகே இருக்கும் சித்தாமூர் ஒன்றியத்தின் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளாரின் மனைவி போட்டியிட இருக்கிறார். இவர் ஏற்கனவே அங்கு இரண்டு முறை ஊராட்சி தலைவராக இருந்தார். கடந்த 10 வருடமாக இந்த ஊராட்சி தனி ஊராட்சியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே போட்டியிடும் ஊராட்சியாக இருந்தது. இதனால் இங்கு அவரால் போட்டியிட முடியவில்லை.

பொது
இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த ஊராட்சி பொது ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி இங்கே மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார். இதற்காக அவர் தனது சொத்து மதிப்பு விவரங்களை மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு 33 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். வங்கி கணக்கில் உள்ள பணம், நிலம், வீடு, கார் உள்ளிட்ட சொத்துக்கள் அடக்கமாக மொத்தம் 33 கோடி ரூபாய் தன்னிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மகன்
இந்த மனுவில் தனக்கு மாற்று வேட்பாளராக மகன் பெயரை அவர் முன்மொழிந்து உள்ளார். மகன் செந்தில்குமார் இதனால் தனது சொத்து விவரங்களை வெளியிட்டு இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 50.7 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு உள்ளார். இது போக இவர்களை சார்ந்து இருக்கும் நபர்களின் சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அங்கு கோவில் பணி தவிர்த்து பல்வேறு கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றையும் நடத்தி வருகிறார்.
Recommended Video

மேல்மருவத்தூர்
மேல்மருவத்தூர் மக்களுக்கு உதவி செய்வது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது, மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பது என்று பல்வேறு பணிகளை இவர்களின் குடும்பமும், அமைப்பும் மேற்கொண்டு வருகிறது. இங்கு வருடா வருடம் பல கோடி பக்தர்கள் வருவதும் வழக்கம். இந்த நிலையில்தான் மீண்டும் தேர்தலில் களமிறங்க மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி முடிவு செய்துள்ளார். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் தேர்தலில் பெரும்பாலும் அவர் சுயேட்சையாக போட்டியின்றி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications