லோக்சபா தேர்தல்.. மாசி அமாவாசையில் நேர்காணல்.. உடன்பிறப்புக்களை அழைத்த எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவில் விருப்பமனு அளித்தவர்களை நேர்காணலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. வரும் 10, 11ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. மாசி அமாவாசை நாளில் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. யாருக்கு எத்தனை தொகுதி என்று முடிவு செய்வதில் இன்னமும் இழுபறி நீடிக்கிறது.

அதிமுகவில் சில கட்சிகள் இணைந்தாலும் 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு பெற்றுள்ளது. தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்றாலும் இன்னொரு பக்கம் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலும் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில், லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வருகிற 10 மற்றும் 11ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கான நேர்காணல், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 10.03.2024 - ஞாயிற்றுக் மற்றும் 11.03.2024 -திங்கட் கிழமை ஆகிய இரண்டு நாட்கள், நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
https://twitter.com/AIADMKOfficial/status/1765738287300579596/photo/2
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகப் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு வேண்டியும்; கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்காகவும் விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும், தவறாமல் விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன், மேற்கண்ட கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவினர்தான் கழக உடன்பிறப்புகள் என்று பயன்படுத்துவார்கள். அதிமுகவினர் ரத்தத்தின் ரத்தங்கள் என்று சொல்வார்கள். அறிக்கையில் உடன்பிறப்புகள் என்று அதிமுகவினர் பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக அதிமுக வெளியிடும் அறிக்கையில் எப்போதுமே அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். சில தினங்களுக்கு முன்பு வெளியான அறிக்கையில் கூட மூவரின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
இன்றைய தினம் நேர்காணலுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ள அறிக்கையில் அண்ணாவின் புகைப்படம் மட்டுமே உள்ளது. தவிர எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து இல்லாமல் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதலுடன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் அதிமுகவினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications