பாமக பொதுக்குழுவில் மத்திய பாஜக அரசு, திமுக அரசுக்கு கண்டனம்.. அப்ப இணைய போவது அதிமுக கூட்டணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம்; கூட்டணி குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு வழங்கப்படுகிறது என அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவின் தீர்மானங்கள் அடிப்படையில் அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாமக இணையக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாமகவின் நேற்றைய புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Lok Sabha Election 2024: PMK may join hands with AIADMK Alliance?

ஜாதிவாரி கணக்கெடுப்பு: ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், சமூகநீதி படிக்கட்டுகளில் கீழே உள்ள மாநிலங்கள் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் சூழலில், படிக்கட்டுகளின் உச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு அதன் தேவையை உணர்ந்து கொள்ள வில்லை அல்லது அப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது என்று விரும்புகிறது. அதனால், தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகளும், அதிகாரங்களும் இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்தாமல், மத்திய அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதுகிறார். சமூகநீதி வரலாற்றில் இதைவிட மோசமான கேலிக்கூத்து இருக்க முடியாது என கண்டனம் தெரிவித்தது பாமக.

வன்னியர் இடஒதுக்கீடு: மேலும் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சருக்கு மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த இரு ஆண்டுகளில் 8 முறை கடிதம் எழுதியுள்ளார்; பல முறை தொலைபேசியில் பேசியுள்ளார்; ஒருமுறை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கிறார். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மூன்று முறை முதலமைச்சரை சந்தித்துள்ளார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான நிர்வாகிகள் குறைந்தது 25 முறை அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர். இவ்வளவுக்குப் பிறகும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்தாமல் இருப்பதன் பொருள், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க விருப்பம் இல்லை என்பது தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. வன்னியர்களுக்கான சமூகநீதியை தாமதிக்கும்/மறுக்கும் தமிழக அரசுக்கு பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது எனவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வு: அதேபோல இந்தியாவில் 2017-ஆம் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நிறைவேறுவதற்கு மாறாக, மருத்துவப் படிப்பு மேலும், மேலும் வணிகமயமாகி வருகிறது. சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்காக 2021&ஆம் ஆண்டு செப்டம்பர் 13&ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதை ஆளுநரே திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் அதே சட்டம் மீண்டும் இயற்றி, மே மாதத் தொடக்கத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 24 மாதங்கள் நிறைவடைந்து விட்டன; அந்த சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 21 மாதங்களாகி விட்டன. ஆனால், நீட் விலக்கு சட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்க வில்லை என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மழை வெள்ள பாதிப்பு: அத்துடன் மழை & வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டு இரு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இன்று வரை தமிழகத்திற்கு மழை நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்காததால், தமிழ்நாட்டில் மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மறுகட்டமைப்பு பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. நிவாரண நிதியை விரைந்து வழங்கும்படி முறையிட சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனவரி 21&ஆம் தேதி வாக்கில் அறிக்கை பெறப்பட்டு, ஜனவரி 27&ஆம் தேதிக்குள் நிவாரண நிதி அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதில் இன்று வரை எந்தவித முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாடு ஏற்கனவே நிதி நெருக்கடியால் அவதிப்படும் நிலையில், அதன் நெருக்கடியை பகிர்ந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை உடனடியாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது எனவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக கூட்டணிதான்?: திமுக கூட்டணியை நோக்கி செல்ல பாமக முயற்சி மேற்கொள்கிறது; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிக்க போகிறது பாமக என்கிற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக பாமக பொதுக்குழுவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாமக இணையக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+