சென்னைக்கு வந்த தாழ்தள சொகுசு பஸ்கள்! எந்த ரூட்டில் ஓடப்போகுது? குரோம்பேட்டைக்கு குட் நியூஸ்
சென்னை: தலைநகர் சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாழ்தள பேருந்துகள் கடந்த 2018ம் ஆண்டு வரை இயக்கப்பட்டன. அதன் பின் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவை இயக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக இரண்டு புதிய பேருந்துகள் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இந்த பேருந்து சேவை எப்போது முதல் தொடங்கும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னையில் மாநகர போக்குவரத்து பேருந்து கழகம் மூலமாக நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் இயக்கப்படும் ஆயிர்க்கணக்கான பேருந்துகள் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். சென்னையில் ரயில், மெட்ரோ ரயில் ஆகியவை இயக்கப்பட்டாலும், அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்றால் பேருந்துகளையே பயணிகள் நாட வேண்டியுள்ளது.

தாழ்தள சொகுசு பேருந்துகள்: இதனால், சென்னை சிட்டி பஸ்களில் பயணிகள் கூட்டம் எந்நேரமும் அலைமோதுகிறது. அதிலும் பீக் நேரங்களில் எல்லாம் பயணிகள் கூட்டம் அலைமோதும். சென்னையை பொறுத்தவரை கடந்த 2018-ஆம் ஆண்டு வரை தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் வகையில் இந்த பேருந்துகள் இருந்தன. ஆனால், 2018-க்கு பிறகு தாழ்தள சொகுசு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படவில்லை.
நீதிமன்றம் உத்தரவு: இந்த நிலையில் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், முதலில் தாழ்தள சொகுசு பேருந்துகளுக்கு அதிக செலவு ஆவதோடு, தாழ்வான படிக்கட்டுகளால் மழை நீர் எளிதில் புகும் என்பதாலும் குறுகலான சாலைகளில் இயக்குவது சிரமம் என்பதால் இந்த பேருந்துகளை வாங்கவில்லை என்று வாதிடப்பட்டது.
350 பேருந்துகள்: எனினும், தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறைந்தபட்சம் 350 பேருந்துகளை இயக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது. இந்த நிலையில் தான் தற்போது, சென்னைக்கு, இரண்டு புதிய தாழ்தள பேருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குரோம்பேட்டை: ராஜஸ்தானில் இருந்து சென்னை குரோம்பேட்டை பணிமைனைக்கு இந்த பேருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன. நீல நிறத்திலான இந்த பேருந்தில் 70 பயணிகள் வரை பயணம் செய்யலாம். 35 இருக்கைகள் உள்ளன. தற்போது ஆர்.டி.ஓ உள்ளிட்ட சில நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் முதல் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.
கோவை, மதுரைக்கும்: புதிய தாழ்தள சொகுசு பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் சிரமம் இன்றி பேருந்துகளில் ஏறும் விதமாக இருக்கும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்பாக தாழ்தள சொகுசு பேருந்துகள் 21 G- (தாம்பரம் - பிராட்வே), 576 (காஞ்சிபுரம் -சைதாப்பேட்டை), மற்றும் 114 (கோயம்பேடு- ரெட் ஹில்ஸ்) ஆகிய ரூட்களில் ஓடின.
வேகத்தடை இல்லாத பிரதான சாலைகளில் மட்டுமே இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மட்டும் இன்றி கோவை மற்றும் மதுரை போக்குவரத்து கழகத்திலும் கணிசமான எண்ணிக்கையில் தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications