பெங்களூர் மட்டுமல்ல.. சென்னையிலும் சிலிண்டர் பிரச்சனை தொடங்கிவிட்டது.. புலம்பும் உணவக உரிமையாளர்!
சென்னை: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விநியோகத்தில் கால தாமதம் தொடர்ந்தால், உணவகங்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூட வேண்டிய சூழல் உருவாகும் என்று உணவக உரிமையாளர் சங்கத்தின் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கதேசத்தில் ரேஷன் முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் பெங்களூரில் ஹோட்டல்களில் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் ஹோட்டல்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரில் தனியார் உணவகங்களை நம்பியுள்ள ஐடி ஊழியர்கள், மாணவ்ர்கள், தொழிலாளர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது சென்னையிலும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சென்னை மணலியில் உள்ள ஐஓசி சிலிண்டர் நிரப்பும் நிறுவனத்தில் 19கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உணவக உரிமையாளர் சங்கத்தின் தியாகராஜன் பேசுகையில், ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக பெட்ரோலிய பொருட்களில் வெகுவான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் ஹோட்டல்களுக்கு விநியோகம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதோடு, விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் செய்தியும், அறிவிப்புகளும் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இது உணவக உரிமையாளர்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை உருவாகி இருக்கிறது. எங்களுக்கு சிலிண்டர் விநியோகிப்பதில் எந்த காலக்கெடுவும் விதிக்காமல், நிதானமாக விநியோகிக்கிறோம் என்று சொல்வது சரியில்லை.
உணவகங்கள் பாதிக்கப்பட்டால், அது பொதுமக்களிடையே சிக்கலை உருவாக்கும். சிலிண்டர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால், உணவு உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாகும். ஒரு கட்டத்தில் உணவகத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் விநியோக சங்கிலியை சீர் செய்ய வேண்டும். ஏற்கனவே தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது பெரிய தட்டுப்பாடு இல்லையென்றாலும், விநியோக சங்கிலியில் சிக்கல் உருவாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications