சென்னை ஆழ்வார்பேட்டையில் பிரபல தனியார் மருத்துவமனையின் கட்டுமான பணிக்கு தடை.. ஐகோர்ட் அதிரடி
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் பிரபல தனியார் மருத்துவமனை கட்டி வரும் 10 அடுக்கு கட்டிட கட்டுமான பணிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. என்ன காரணத்திற்காக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பதை பார்ப்போம்.
சென்னை ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரீஸ் சாலையில் எம்.ஜி.எம்.மருத்துவமனை கட்டி வருகிறது.. இந்த மருத்துவமனை கட்டுமானத்தால் இரவு நேரங்களில் மக்கள் தூங்க முடியாத அளவிற்கு அதிகப்படியான ஒலி மாசு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியுள்ளதாவது: சென்னை ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரீஸ் ரோட்டில் எம்.ஜி.எம். மருத்துவமனை 10 மாடி கட்டிடத்தை கட்டி வருகிறது. இதற்காக ஆழ்குழாய் மூலமாக அஸ்திவாரம் போடுவதால் அந்த பகுதியில் கடுமையான ஒலி மாசு
இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் முறையாக அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்பதும் தெரியவில்லை. அந்த பகுதியில் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். மேலும் ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரீஸ் ரோட்டில் பள்ளி, கல்லூரிகளும், குடியிருப்புகளும் அதிகமாக இருக்கின்றன..
மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நடைபெறும்போது ஏற்படும் ஒலி மாசு காரணமாக இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை. அங்கு இரவெல்லாம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த அளவை விட அதிக ஒலி மாசு ஏற்படுகிறது. இதுகுறித்து, மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
இந்த மருத்துவமனை கட்டுமானத்துக்காக மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை அஸ்திவாரம் போடும் பணியை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். மேலும் மருத்துவமனை கட்டுமானத்தின் போது ஒலி மாசு விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறினார்..
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் ஆகியோர் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சி.எம்.டி.ஏ., தரப்பில் ஆஜரான வக்கீல் ஒய்.புவனேஷ்குமார், இந்த 10 மாடி கட்டுமானத்துக்கு சி.எம்.டி.ஏ., தரப்பில் திட்ட அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை, என்றார்.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் கட்டி வரும் 10 மாடி கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications