சென்னையில் புதிய டாஸ்மாக் கடையா.. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
சென்னை: சென்னை பெரியமேடு குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரியமேட்டை சேர்ந்தவர் மனோகர். ஓய்வு பெற்ற தலைமைச் செயலக ஊழியரான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது: பெரிய மேட்டில் உள்ள நேவல் மருத்துவமனை சாலையில் நான் வசித்து வருகிறேன். இந்தப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுக் கல்லூரி, மத வழிபாட்டு தலங்களும் இருக்கின்றன.

இந்நிலையில், நேவல் மருத்துவமனை சாலையில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க டாஸ்மாக் மேலாண் இயக்குனர் ,டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோர் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இந்த கடை செயல்பட தொடங்கினால் இங்குள்ள மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். இதுதொடர்பாக கடந்த ஆண்டு டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு தனது மனுவில் மனோகர் கூறியிருந்தார்.
இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணை வந்தது. அப்போது புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பெரியமேடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications