அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து.. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
சென்னை: அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.15 லட்சம் அபராதமும், தமிழ்நாடு சமரச தீர்வு மையத்திற்கு ரூ.15 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனர்ஜி ரிசோர்ஸ் பிரைவேட் லிமிடெட், எனர்ட்டியா சோலார் இன்ஃப்ரா, எனர்ட்டியா வின்ட் இன்ஃப்ரா, ட்ரூ வேல்யூ ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக ரவிச்சந்திரன், மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2013 ஆம் ஆண்டு ரூ.30 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்தனர். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த வங்கி ரூ.22.48 கோடி கடன் வழங்கியது.
கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை சகோதர நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதால், 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கேஎன் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் என். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021 ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் கேஎன் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில், சிபிஐ வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரும் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு ரவிச்சந்திரன் தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி டி.சக்கரவர்த்தி, சிபிஐ வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் ரூ.30 லட்சம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார். இதில் ரூ.15 லட்சத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், ரூ.15 லட்சத்தை தமிழ்நாடு சமரச தீர்வு மையத்திற்கும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் மோசடி எதுவும் நடைபெறவில்லை என்றும், அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications