அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்- தடை கோரிய ஓபிஎஸ் மனு மீது நாளை மறுநாள் முன்கூட்டியே விசாரணை
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ், இ.பி.எஸ்) செயல்படுவதற்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ், ஓ.பி.எஸ்) மேல்முறையீட்டு மனு மீது முன்கூட்டியே நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமியும் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது ஏப்ரல் 20-ந் தேதி விசாரணை நடைபெற இருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 16-ந் தேதி அதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டத்தை இபிஎஸ் கூட்டியுள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தல், அதிமுக உறுப்பினர் ஆட்சேர்ப்பு தொடர்பாக இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதனையடுத்து தமது மேல்முறையீட்டு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை ஓபிஎஸ் நாடினார்.
இதனை ஏற்று ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை நாளை மறுநாள் அதாவது முன்கூட்டியே விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி: அதிமுக 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச் உடனே விசாரணைக்கு ஏற்று விசாரித்தது. பின்னர் ஏப்ரல் 3-ந் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
ஏப்ரல் 3-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மீது இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனை ஓபிஎஸ் தரப்பு இடைக்கால நிவாரணமாக கோரியிருந்தது. ஆனால் இதனை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து நிராகரித்தது. அத்துடன் ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனு மீது ஏப்ரல் 20-ந் தேதி விசாரணை நடைபெறும் என கூறியிருந்தது.
இந்த வழக்கைதான் ஏப்ரல் 16-ந் தேதி அதிமுக செயற்குழு கூடுவதை சுட்டிக்காட்டி முன்கூட்டியே விசாரிக்க ஓபிஎஸ் தரப்பு கூறியது. இதனை ஏற்று ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications