அதிமுக பொதுச்செயலாளர் பதவி.. சசிகலா மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சசிகலாவின் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.
சென்னை: அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புகள் மற்றும் அதிமுக தரப்பு ஆகியவை தங்களது வாதங்களை இந்த வழக்கில் முன்வைத்தன. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதற்கு எதிரான வழக்கில் சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்தும் பதவிகளிலிருந்து நீக்கியதுடன், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சசிகலாவின் வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கூறி அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே செம்மை டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடும் என கருதி சசிகலா தரப்பு ஒரு கேவியட் மனுவையும் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜாகோபாலன் ஆஜராகி, சசிகலா வழக்கை மீண்டும் பட்டியலிட்டு விசாரணை நடத்த வேண்டுமென முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் இன்று வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவதாக கூறியிருந்தார். சசிகலா வழக்கு விசாரணையில் நீதிமன்றம் எத்தகைய உத்தரவு பிறப்பிக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியது.












Click it and Unblock the Notifications