அரசு பேருந்து ஓட்டுனருக்கு செருப்படி.. திகைத்துப் போன பயணிகள்! அந்த அதிகாரிக்கு என்ன தண்டனை!
மதுரை: மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பேருந்தை இயக்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக, தாராபுரம் கிளையைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநரை ஆரப்பாளையம் பேருந்து நிலைய அதிகாரி செருப்பால் அடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஓட்டுநரை தாக்கிய ஆரப்பாளையம் பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று பக்ரீத் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக பயணிகள் ஏராளமானோர் அரசு பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து பயணிகளுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்து நிறுத்தப்பட்டது.

பின்னர் பேருந்தை எடுப்பதற்கு தாமதமான நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநர் கணேசனிடம் கேட்டுள்ளனர். அப்போது மேலாளர் கூறினால் மட்டும் தான் பேருந்தை எடுத்துச் செல்ல முடியும் என கூறியுள்ளார். பின்னர் பயணிகள் நேரடியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்த போக்குவரத்து உதவி மேலாளரிடம் பேருந்தை விரைவாக எடுக்குமாறு கூறியுள்ளனர். அப்போது ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் வேறு பேருந்தில் செல்லுமாறும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், இதுபோன்று திடீரென கூறினால் நாங்கள் எப்படி செல்வது? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே நீங்கள் என்ன முன்பதிவு செய்தீர்களா? நீங்கள் இப்படி என்னிடம் வாக்குவாதம் செய்தால் நீங்கள் போகும் இடத்திற்கு செல்ல முடியாது என பயணிகளை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து உதவி மேலாளர் பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு வந்த பயணிகளுக்கு ஆதரவாக அருகில் உள்ள அதிகாரிகளும் பேசியதால், பயணிகளுக்கும் உதவி மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அங்கு வந்த ஓட்டுநர் கணேசன் அதிகாரிகளை கடுமையாக திட்டியபடி அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார். அப்போது உதவி மேலாளர் மாரிமுத்து திடீரென ஓட்டுனர் கணேசனை தனது செருப்பால் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். நீ என்ன பயணிகளை வைத்து தூண்டி விடுகிறாயா என கூறியபடி செருப்பால் அடித்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனையடுத்து அந்த அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர்கள் சங்கத்தினரும் பயணிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரத்தில் ஆரப்பாளையம் பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்துவை பணியிடம் நீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குனர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் இதுபோன்று அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது விசாரணைக்கு வரும்போது அதிகாரிகள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், பயணிகளை பேருந்து ஏற்றிவிட்டு காத்திருக்க வைக்க கூடாது எனவும் ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் உத்தரவுகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications