ரேஷன் கார்டு உள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகையா? அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பரபர விளக்கம்!
சென்னை: ரேஷன் கார்டு உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று கூறியது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. இந்நிலையில் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு, மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரமாகவும் மாதம் ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தற்போது 1 கோடிய 16 லட்சம் குடும்பத் தலைவிகள் மாதம் தோறும் ரூபாய் 1,000 பெற்று வருகின்றனர். கடந்த 13 மாதங்களாக இந்த உரிமைத்தொகை, பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. உரிமைத்தொகை பெற சில தகுதிகளையும் அரசு நிர்ணயித்திருந்தது. அதன் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஆண்டுக்கு 2.50 லட்ச ரூபாய்க்கும் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஓராண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் இந்த உரிமைத் தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் மகிழும் வண்ணம் ஒரு சூப்பர் செய்தியை தெரிவித்தார். ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் வரும் ஜனவரி மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அருப்புக்கோட்டையில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளின் தொடக்க விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரேஷன் கார்டு உள்ள அனைத்து பெண்களுக்கும் வரும் ஜனவரி மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications