கச்சேரி இருக்கு.. யார் அந்த "கருப்பு ஆடு".. கோட்டைக்கு பறந்த புகார்.. ஆக்ஷனில் இறங்கும் ஸ்டாலின்..!
களையெடுப்பு விரைவில் திமுகவில் நிகழலாம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்
சென்னை: அதிமுகவில் உச்சக்கட்ட பஞ்சாயத்து நடந்து வரும் அதேசமயம், திமுகவிலும் உட்கட்சி பிரச்சனை, புகார்கள் ஆங்காங்கே வெடித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் "களையெடுப்பு" விரைவில் நிகழலாம் என்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த சில வாரங்களிலேயே, பல இடங்களில் காசு வாங்கிக்கொண்டு பதவி வழங்குவதாகவும் மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் எழுந்தன.
அதேபோல, தேர்தலில் உள்ளடி வேலை பார்த்தவர்கள் குறித்த லிஸ்ட்டும் தலைமைக்கு பறந்தது.. எனினும், முதல்வர் ஸ்டாலின், கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து, சம்பந்தப்பட்டவர்களை கண்டித்தாரே தவிர, யாரையும் பொறுப்பில் இருந்து நீக்கவில்லை.
பொறுமையுடன் அனைத்தையும் கையாண்டு வரும்நிலையில், மீண்டும் பல இடங்களில் மாவட்ட செயலாளர்கள் மீது திமுக நிர்வாகிகள் தலைமை கழகத்திற்கு புகார் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

தங்க தமிழ்செல்வன்
அந்தவகையில், தேனி மாவட்டத்தை எடுத்துக் கொண்டாலும், செயலாளராக உள்ள தங்கத்தமிழ்செல்வனை திமுகவினர் புறக்கணித்து வருவதாக ஒரு பேச்சு எழுந்தது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கியதாக புகார் எழுந்தது.. மேலும், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக தன்னுடைய ஆதரவு வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்தார் என்றும் சிலர் கொளுத்தி போட்டார்கள்.. இதைதவிர, கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட செயலாளர் என்கிற முறையில் தங்க தமிழ் செல்வனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வட்டமடித்தன.

வார்னிங்
இதனால், தங்கதமிழ் செல்வன் அதிருப்தியில் இருப்பதாகவும், பேசாமல் அதிமுகவுக்கே திரும்பி வர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால், இதற்கு உடனடியாக மறுப்பு வெளியிட்டு, கொந்தளித்திருந்தார் தங்க தமிழ்செல்வன்.. இப்படி அவதூறு கிளப்பினால், வழக்கு பாயும் என்றும் எச்சரித்திருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. இதற்குநடுவில் ஐ.பெரியசாமியே ஒரு வருத்தத்தில் இருப்பதாக இன்னொரு செய்தி கிளம்பி உள்ளது..

ஜாபர்சேட்
ஜாபர்சேட் விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ஐபியிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை குறித்தோ இதில் அடுத்ததாக, தான் போகவேண்டிய திசை குறித்தோ திமுக தலைமையிலிருந்து இதுவரை யாருமே அவரிடம் பேசவில்லையாம். இப்படி ஒரு வருத்தம் பெரியசாமிக்கு உள்ளது என்கிறார்கள். அதேபோல, ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் மீது திமுக தலைமைக்கு நிறைய புகார்கள் சென்றுள்ளதாகவும், இந்த புகார் தொடர்பாக திமுக மேலிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது...

தர்மசங்கடம்
இன்னொருபக்கம் தர்மபுரியில் குழப்பங்கள் நீடிக்கிறது.. அங்குள்ள எம்பி, திமுகவுக்கே தர்மசங்கடம் ஏற்படும் அளவுக்கு சில சமயங்களில் நடந்து கொள்வது விமர்சனத்துக்கு உள்ளாகிவிடுகிறது.. அதேபோல மிக முக்கிய பொறுப்பில், கொங்கு சமூகத்தை சேர்ந்த பிஆர் பழனியப்பன் பொறுப்புக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வரும் நிலையில், அங்குள்ள பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இனி முன்னிறுத்தப்படுவார் என்றும் தகவல்கள் வட்டமடிக்கின்றன.

மாவட்ட செயலாளர்கள்
இதைதவிர, ஒருசில மாவட்ட செயலாளர்களின் நடவடிக்கைகள் குறித்த புகார்களும் தலைமைக்கு அடிக்கடி சென்றுள்ளது.. கடந்த சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் சரியாக களப்பணியாற்றாத மாவட்டச் செயலாளர்கள் மீதும், கட்சிக்கு அவப்பெயரைக் கொண்டுவரும் மாவட்ட செயலாளர்கள் மீது திமுக தலைமை கடுமையான அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், இந்த கோபம் அதிகரித்து இருக்கிறதாம்..

கருப்பு ஆடு
அதனால், எவ்வித சமரசமும் இல்லாமல் இவர்களில் சிலரை மாற்றவும் முடிவெடுத்திருக்கிறதாம் தலைமை.. அத்துடன், சில கருப்பு ஆடுகளின் நடமாட்டமும் இருப்பதால், அவர்களுக்கும் இந்த முறை கட்டம் கட்ட மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. விரைவில் எம்பி தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில், விரைவில் கடிவாளத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுப்பார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications