காந்தியோடு மோடியை ஒப்பிட்ட அம்ருதா.. “கலகம் செய்து பதவி கொடுத்ததற்கு நன்றிக்கடனா?” கொதிக்கும் மநீம!
சென்னை : மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவின் தேசத் தந்தை என புகழ்ந்து, தேசப்பிதா மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டுப் பேசியிருப்பதை, மக்கள் நீதி மய்யம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆதரவோடு கலகம் செய்து ஆட்சியைப் பிடித்து புறவாசல் வழியே துணை முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் தனது நன்றிக் கடனை தீர்க்க மனைவி அம்ருதா பட்னாவிஸ் மூலம் மோடியை புகழ்ந்து பாட வேண்டுமானால் பாஜகவின் அரசவை புலவராகி தொடர்ந்து அவரது புகழ் பாடட்டும் என மநீம விமர்சித்துள்ளது.
நம் தேசப்பிதா காந்தியாரோடு நரேந்திர மோடியை ஒப்பிடுவது என்பது கடவுளுக்கு இணையாக அரக்கனை ஒன்றாக வைத்து ஒப்பீடு செய்வதற்கு சமம் என்றும் கடுமையாகச் சாடியுள்ளது மக்கள் நீதி மய்யம்.

2 தேசத் தந்தைகள்
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவில், பிரதமர் மோடியை புதிய இந்தியாவின் தந்தை எனப் புகழ்ந்து பேசியுள்ளார். நாக்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தலைவரும், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், இந்தியாவுக்கு இரண்டு தேசத் தந்தைகள் உள்ளார்கள், இந்தியாவின் முந்தைய காலத்தின் தேசத் தந்தை மகாத்மா காந்தி, புதிய இந்தியாவின் தந்தை பிரதமர் நரேந்திர மோடி என தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கொதிப்பு
அம்ருதா பட்னாவிஸின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் யஷோமதி தாகூர், "பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர்கள், தொடர்ந்து காந்தியை மீண்டும் மீண்டும் கொல்ல முயற்சிக்கின்றனர். தொடர்ந்து தவறான கருத்துகளைப் பரப்பி பொய்களை திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் மகாத்மா காந்தி போன்ற பெரியவர்களை சிறுமைப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள்" எனச் சாடியுள்ளார்.

மநீம கண்டனம்
இந்நிலையில், இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவின் தேசத்தந்தை என புகழ்ந்து தேசப்பிதா மகாத்மா காந்தியோடு ஒப்பிடும் வகையில் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடவுளுக்கு இணையாக அரக்கன்?
கடந்த சில மாதங்களுக்கு முன் மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆதரவோடு கலகம் செய்து ஆட்சியைப் பிடித்து புறவாசல் வழியே துணை முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் தனது நன்றிக் கடனை தீர்க்க மனைவி அம்ருதா பட்னாவிஸ் மூலம் மோடியை புகழ்ந்து பாட வேண்டுமானால் பாஜகவின் அரசவை புலவராகி தொடர்ந்து அவரது புகழ் பாடட்டும். ஆனால் நம் இந்திய தேசம் மட்டுமல்ல உலகமே ஏற்றுக் கொண்டு கடைபிடிக்க முயற்சி செய்து வரும் அகிம்சையை தந்த நம் தேசப்பிதா காந்தியாரோடு நரேந்திரமோடி அவர்களை ஒப்பிடுவது என்பது கடவுளுக்கு இணையாக அரக்கனை ஒன்றாக வைத்து ஒப்பீடு செய்வதற்கு சமம்.

ஏற்கவே முடியாது
எனவே, இது போன்ற கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சுதந்திர இந்தியாவில் வெறுப்பு அரசியலை உருவாக்கி, மதவாத அரசியல் செய்து, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகி வருவதோடு, சிறு, குறு, நடுத்தர தொழில்களையெல்லாம் ஒழித்துக்கட்டி, கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து, அவர்களின் பல லட்சம் கோடி கடனையெல்லாம் வாராக்கடன்களாக தள்ளுபடி செய்து, விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து, தேசத்தில் வேலையில்லா திண்டாட்டங்களை உருவாக்குபவர் பிரதமர் மோடி.

சுயவிளம்பரத்தின் தந்தை
மேலும், சுயவிளம்பரங்களுக்கு மட்டும் அரசின் சார்பில் பலநூறு கோடி ரூபாய் செலவிட்டு ஆட்சி நடத்தும் நரேந்திரமோடியை 21ம் நூற்றாண்டில் "சுயவிளம்பரத்தின் தந்தை," "கார்ப்பரேட்டுகளின் காவலன்," "வெறுப்பு அரசியலின் தந்தை" என்று வேண்டுமானால் அழைக்கலாம். அப்படி அழைக்க அம்ருதா பட்னாவிஸ் அவர்களும், அவரை புகழ்ந்து தள்ள நினைப்பவர்களும் பரிசீலனை செய்யலாம் என மநீம பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications