தேசிய அரசியலில் குதித்த மன்சூர் அலிகான்.. கட்சி பெயர் மாற்றம்.. லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு!
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தனது கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே 'தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். கடந்த கால தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார் மன்சூர் அலிகான். தற்போது அந்த கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். இதற்கான அறிவிப்பை இந்தியாவின் குடியரசு தினமான நேற்று வெளியிட்டுள்ளார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், "தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் நான் ஏற்கனவே தொடங்கிய இந்த அமைப்பை தற்போது தேசிய அளவில் எடுத்துச் செல்வதற்காக இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் என்று மாற்றியிருக்கிறேன். இதனை குடியரசு தின நாளில் தொடங்கி இருக்கிறேன்.
எளியவர்களை பதவியில் அமர்த்துவதோடு, ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும், பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவதும் தான் எங்கள் கட்சியின் நோக்கம். அதற்காக தீவிரமாக பயணிக்க இருக்கிறோம். இதற்காக இந்தியா முழுவதும் நாங்கள் பொறுப்பாளர்களை நியக்க உள்ளோம். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்.
மற்றவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதை பார்த்து பார்த்து பெரும் பசியில் இருக்கிறோம். அதனால் எங்களுடைய அரசியல் இனி தீவிரமாக இருக்கும். அதேபோல் தடாலடியான பதவிகளும் வழங்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து எங்களது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம். அந்த முடிவை விரைவில் நடைபெற உள்ள எங்கள் கட்சியின் மாநாட்டில் அறிவிப்போம்.
எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம், எங்கள் ஒரே நோக்கம் ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் பதவியும், ஆட்சி அதிகாரமும் வழங்க வேண்டும் என்பதோடு, பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவதற்காக அவருடைய வழியிலும் தீவிரமாக பயணிக்க வேண்டும் என்பதுதான். சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்தியா முழுவதும் நடத்த வேண்டும்.
சீமான் 2009ல் கட்சி தொடங்கினார். நான் அதற்கு முன்பே 1992லேயே அரசியலுக்கு வந்துவிட்டேன். 1992லேயே பாமகவில் பயணித்து அதன் பிறகு வெளியே வந்தேன். 1999ல் புதிய தமிழகம் சார்பாக எம்.பி தேர்தலில் போட்டியிட்டேன். 2009ல் திருச்சியில் தனியாக நின்றேன். 2019ல் நாம் தமிழர் கட்சி மூலமாக போட்டியிட்டேன். 2024ல் நாங்கள் மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ளோம். பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடுவோம். " என்று கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி குடியரசு தினத்தை மன்சூர் அலிகான் கொண்டாடினார். அப்போது, தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிவிட்டு, பின்னர் அங்கிருந்தவர்கள் சுட்டிக்காட்டியவுடன் மீண்டும் இறக்கி சரியாக கொடியை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications