உலக அரசியலே அதிரப்போகுது.. நடுக்கடலில் யூ டர்ன் போட்ட நாடுகள்! ஈரான் சத்தமே இன்றி செய்த சம்பவம்
நியூயார்க்: கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்கத் தயக்கம் காட்டி வருகின்றன. சில கப்பல்கள் ஏற்கனவே அப்பகுதியில் செல்லாமல் திசைமாறிச் சென்றுள்ளன. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்கா தலையிட்டால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அமெரிக்கா நடத்திய தாக்குதலால் விரைவில் ஈரான் இந்த ஜலசந்தியை மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
ஹார்முஸ் ஜலசந்தி என்பது மத்திய கிழக்கு வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய நீர்வழி. இதன் குறுகலான இடத்தில் ஜலசந்தி சுமார் 21 மைல்கள் அகலம் கொண்டது. மேலும் இரண்டு திசைகளிலும் இரண்டு மைல்கள் அகலமுள்ள இரண்டு கப்பல் பாதைகள் உள்ளன. இது உலகின் மிக முக்கியமான ஜலசந்தியாகக் கருதப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீதத்தை இந்த ஜலசந்தி கையாளுகிறது. இது உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றாகும். இந்த ஜலசந்தியில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும் உலக எண்ணெய் சந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாதை தடுக்கப்பட்டால் உலகின் பொருளாதாரம் சில வாரங்களில் பாதாளத்திற்குச் செல்லும் அபாயம் உள்ளது.
ஈரானால் ஜலசந்தியை மூட முடியுமா?
ஹார்முஸ் ஜலசந்தியை மூட முடியும் என்று ஈரான் நீண்ட காலமாக கூறி வருகிறது. இந்த ஜலசந்தியை ஒரு சாலையை மூடுவது போல் எளிதாக மூட முடியாது. ஆனால் வணிகப் போக்குவரத்துக்கு ஆபத்தானதாக மாற்றி, உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க ஈரான் முயற்சி செய்யலாம். இரண்டு ஏவுகணைகளை ஏவினால் போதும், போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும்.
1980 களில் ஈரான்-ஈராக் போரின்போது, ஈரான் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் எண்ணெய் ஏற்றுதல் வசதிகளைக் குறிவைத்துத் தாக்கியது. சீன தயாரிப்பான Silkworm ஏவுகணைகள் மற்றும் அதிவேக படகுகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கைகள் ஜலசந்தியை முழுமையாக தடுக்கவில்லை, ஆனால் கப்பல் காப்பீட்டு பிரீமியங்களை கூர்மையாக அதிகரித்தது மற்றும் கடல் போக்குவரத்தை தாமதப்படுத்தியது. இதனால் கடுமையான பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது.
2012 ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான் ஜலசந்தியை ஒரே கட்டமாக மூட முயற்சிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக இந்த பகுதியை மூட முயற்சிக்கலாம். ஈரான் குறைவான தாக்குதல்களுடன் தொடங்கி காலப்போக்கில் அதிக வன்முறைக்கு செல்லலாம். இதன் மூலம் போக்குவரத்தை தடுக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியும்?
ஈரான் பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த ஜலசந்தியை முடக்க முடியும்:
ஜலசந்தியில் நுழையும் கப்பல்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்று வெளிப்படையாகக் கூறாமல் கப்பல் போக்குவரத்துக்கு ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பது.
ஜலசந்தியில் அல்லது பாரசீக வளைகுடாவின் பிற பகுதிகளில் செல்லும் கப்பல்கள் இடைமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்படலாம் அல்லது தாக்கப்படலாம் என்று வெளிப்படையாக அறிவித்து கப்பல்களை அச்சுறுத்துவது.
ஜலசந்தியில் அல்லது வளைகுடாவின் பிற பகுதிகளில் செல்லும் கப்பல்களை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்துவது.
ஜலசந்தி மற்றும் வளைகுடாவின் பிற பகுதிகளில் கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்துவது.
நீர்மூழ்கிக் கப்பல்கள், மேற்பரப்பு கப்பல்கள், கரையோர ஏவுகணைகள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தி ஜலசந்திக்கு வெளியே உள்ள வெளிநாட்டு கடற்படைக் கப்பல்களைத் தாக்குவது.
இந்த நடவடிக்கைகள் கப்பல்கள் அப்பகுதிக்குச் செல்லாமல் தவிர்க்க வழிவகுக்கும். இது மிகப்பெரிய பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கும்.
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்கா தலையிட்டால், உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications