இங்கிலாந்து அரசரா.. என கேட்ட நீதிமன்றம்! ஆஜராவது குறித்து வாய் திறந்த அமைச்சர் மரிய வில்சன்
சென்னை: தனது சகோதரனை தாக்கிய வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்திருந்த மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையில், மரிய வில்சன் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என சரமாரி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராவதாக அமைச்சர் மரிய வில்சன் தரப்பு தெரிவித்திருக்கிறது.
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார் என்பதை சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் கிடையாது என கண்டனம் தெரிவித்திருந்தது.

அமைச்சருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது, ஆளுங்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்த மாதம்.. அதாவது ஆக.31க்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜராவதாக மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
வழக்கின் விவரம்
மரிய வில்சனின் சகோதாரர், குடும்பத்துடன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மரிய வில்சன் பயங்கர ஆயுதங்களுடன் அவரது சகோதரர், சகோதரரின் மனைவி மற்றும் குடும்பத்தினரை தாக்கியிருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி போலீசார் தொடக்கத்தில் சாதாரண பிரிவுகளில்தான் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், நீதிமன்றத்தை அணுகிய சகோதரர் தரப்பு.. வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்து கடுமையான பிரிவுகளின் கீழ் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
பின்னர் நீதிமன்றத உத்தரவை தொடர்ந்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது மரிய வில்சன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கடைசி வரை அவர் ஆஜராகவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி, நீதிமன்றத்திலிருந்து ஆஜராவதிலிருந்து விலக்கு பெற்றார்.
மட்டுமல்லாது.. வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராணயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தார். இதையடுத்து தற்போது நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்து மரிய வில்சன் தரப்பு விளக்கமளித்துள்ளது.


Click it and Unblock the Notifications
