நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு
சென்னை: நீட் தேர்வில் உதித்சூர்யா என்ற மாணவன் ஆள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் வெங்கடேசன். இவருடைய மகன் உதித்சூர்யா (வயது 19). இவர் இந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதி. தேர்ச்சி பெற்றதாக கலந்தாய்வில் பங்கேற்று தேனி மருதுவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில் அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக ரகசிய புகார் வந்ததது. அதன்பேரில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நடத்திய விசாரணையில் உண்மை என்பது உறுதியானது.

மாணவர் மீது வழக்கு
நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்ற புகைப்படத்துடன், உதித்சூர்யா புகைப்படம் ஒத்துப்போகவில்லை. இதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி க.விலக்கு போலீசார், மாணவர் உதித்சூர்யா மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

தலைமறைவான மாணவர்
இந்த வழக்கில் உதித்சூர்யாவை பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படையை போலீசார் அமைத்துள்ளனர். அவரை தனிப்படையினர் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடிவருகிறார்கள். ஆனால் உதித்சூர்யா தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க மாணவர் சேர்ந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகளுக்கு தொடர்பு?
ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்கு பல லட்சம் ரூபாய் கைமாறி இருக்கலாம் என சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் பயிற்சி மையம், சம்பந்தப்பட்ட தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உள்பட அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தேனி மருத்துவக்கல்லூரி டீன்
இதனிடையே மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனும், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும் சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வேலை பார்த்துள்ளார்கள். இதனால், இந்த வழக்கு விசாரணையை உயர்அதிகாரிகள் நடத்த உள்ளனர். இதற்காக நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன் ஜாமின் மனு
இதனிடையே மாணவர் உதித்சூர்யா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு நாளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!