நினைவு சின்னமாகும் காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு.. முதல்வரின் நடவடிக்கைக்கு குமரி அனந்தன் பாராட்டு!
சென்னை : காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை நினைவுச் சின்னமாக்க முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டினைக் கொண்டாடும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.

இதனையடுத்து, இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்த ஆணையில், காசியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தின் முன்புறம் உள்ள அறையினை புனரமைத்து அதில் பாரதியாருக்கு மார்பளவு வெண்கலச் சிலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக வெண்கல சிலை அமைக்க ரூ.18 லட்சம் மற்றும் அவ்வறைக்கு மாத வாடகையாக நடப்பு நிதியாண்டிற்கு ரூ.67,500 என மொத்தம் ரூ.18,67,500 நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ.90 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சரின் இந்த சீறிய முயற்சிக்கு அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு காந்தி பேரவை தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதியாரின் தந்தை பஞ்சு அரவை ஆலை நடத்தி கொண்டிருந்த போது, வெள்ளையர்கள் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட செய்தனர். இதனால் மனமொடிந்து கவலையில் மூழ்கி வெகு விரைவில் இறந்து போனார். அப்போது, நெல்லையில் படித்துக் கொண்டிருந்த பாரதி செய்வதறியாது திகைத்தப்போது, காசியில் இருந்த அத்தை குப்பம்மாள் அழைத்துக் கொண்டார்.
அப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கங்கை நதிக்கரையில் அமர்ந்து அதன் எழில் கோலத்தை ரசித்தார் பாரதி. "இன்னரும் நீர்க் கங்கை ஆறு எங்கள் ஆறே" என்று பாடினார். "வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்" என்று நதிகள் இணைப்பு பற்றி அன்றே சித்தித்து பாடினார். "கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்" என்று பண்டமாற்று முறையையும் பாடினார்.
பாரதியார் காசியில் வாழ்ந்த போது தான் மீசை வைத்துக் கொண்டார். அந்த மீசை முகத் தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. அந்த காசியில் பாரதி அன்று வாழ்ந்த வீட்டை நினைவுச் சின்னமாக்க முடிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அவரது தந்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் 'இளைய பாரதி' எனப் பாராட்டப்பட்ட நான், தமிழ் நெஞ்சங்களின் சார்பில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications