Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெட்ரோ + வந்தே பாரத் + எக்ஸ்பிரஸ் வே.. அப்படியே மாறுகிறது தமிழ்நாடு! இனி ரொம்ப ஈஸியா போகலாம்.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து மேற்கொள்ள இருக்கும் சாலை திட்டங்கள், மெட்ரோ திட்டங்கள் காரணமாக போக்குவரத்து இனி எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை என்னென்ன திட்டங்கள் என்று இங்கே பார்க்கலாம்.

சென்னை - பெங்களூர் சாலை: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Metro + Expressway + Vande Bharat Train: How Tamil Nadu transport is going to change?

முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும்.

இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம். இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் இதற்கான டெண்டர் விடப்படும். இந்த வருட இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். சென்னை - பெங்களூர் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் ஹைவேஸின் மேல் இந்த பாலம் கட்டப்படும். நடுவில் ஒரு பில்லர் வைத்து மெட்ரோ பாணியில் இந்த பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரவாயல் பாலம்: மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் விரைவில் பூமி பூஜை நடத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் 2010ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் என்பது திமுகவின் கனவு திட்டம் ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதியின் கனவு திட்டமாக இது இருந்தது.

2011ல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் 2022 வரை தொடங்கப்படாமல் இருந்தது. 11 வருடமாக திட்டம் முடங்கி கிடந்தது. இங்கு வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சென்னைக்கே அலங்கோலத்தை கொடுக்கும் விதமாக மாறியது. இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் தொடங்க உள்ளது. முதலில் இருந்து கட்டுமானத்தை தொடங்குவதற்காக முடிவு எடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது.

சென்னையில் கட்டப்பட உள்ள இந்த மதுரவாயல் பாலம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இதற்கான டெண்டர் சமீபத்தில் விடப்பட்ட நிலையில், J Kumar Infraprojects என்ற நிறுவனம் வென்றுள்ளது. ஏற்கனவே டெண்டர் 1, 2, 4 ஆகியவற்றை கைப்பற்றிய இந்த நிறுவனம் தற்போது டெண்டர் 4-ஐயும் கைப்பற்றி உள்ளது.

Metro + Expressway + Vande Bharat Train: How Tamil Nadu transport is going to change?

மதுரை மெட்ரோ: மதுரை மெட்ரோ தொடர்பான ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். பல்வேறு இடங்களில் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அனுமதியும் பெற வேண்டும். அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். இந்த இரண்டு மெட்ரோவிற்கான ரிப்போர்ட் இந்த வாரமே அளிக்கப்பட உள்ளது.

அதாவது எங்கிருந்து எங்கே பாதை அமைக்கலாம்.. மேலே பாலம் அமைப்பது.. கீழே சாலைக்கு அடியில் அமைப்பது போன்ற அனைத்து விவரங்களும் அடங்கிய ரிப்போர்ட் இந்த மாதம் அளிக்கப்பட உள்ளது. மேலும் பல தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யப்பட உள்ளது. அவர்களுடன் ஒப்பந்தம் பெற வேண்டும். இதற்காக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இதனால் மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும்.

சென்னையில் உள்ளதை போன்ற மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027ல் மெட்ரோ பணிகள் மதுரையில் முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels )செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும்.

இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சுரங்க பாதையும் அமைக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும்.

கோவை மெட்ரோ: கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும். இதற்கான உத்தேச திட்ட அறிக்கை நேற்று வெளியானது. அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் இருப்பது போலவே அதே வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக கொண்டு வரப்பட உள்ளது. சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை முதல் கட்ட பணியின் இறுதியில் மெட்ரோ அமைக்கப்படும்.

சேலம், திருச்சி, நெல்லை மெட்ரோ: திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் மெட்ரோ துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மெட்ரோவின் ரூட் மற்றும் அமைய உள்ள நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (Detailed Feasibility Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் சென்னை, நந்தனதில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் இன்று (31.08.2023) சமர்பித்தார்.

தற்போது சென்னையில் மெட்ரோ இரயில் துரித போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கிவருகிறது. அதே போல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் மற்றும் விரைவாக்கும் வகையிலும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சாத்தியக் கூறு ஆய்வின் மூலம் திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கு உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் இந்த சாத்தியக் கூறு அறிக்கையில் கண்டறியப்பட்டன. அதன்படி போக்குவரத்துத் திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருச்சிராப்பள்ளி: திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 26 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் வழித்தடங்களில் 2 45 கி.மீ நீளத்திற்கு 45 நிலையங்கள்கண்டறியப்பட்டுள்ளன.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 13 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், பாளையம்கோட்டை முதல் பொன்னாக்குடி வரை 12.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 12 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், சங்கர்நகர் முதல் வசந்தநகர் வரை 14.65 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 3-ல் 15 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 3 வழித்தடங்களில் 39.07 கி.மீ நீளத்திற்கு 40 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சேலம்: சேலம் மாநகராட்சியில் கரபுரநாதர் கோவில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் இரயில் நிலையம் வரை 17.16 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், கருப்பூர் முதல் சேலம் இரயில் நிலையம் சந்திப்பு வழியாக நல்லிகலப்பட்டி வரை 18.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 2 வழித்தடங்களில் 35.19 கி.மீ நீளத்திற்கு 38 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போதுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அடுத்த 30 ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த பெருந்திரள் துரித கால போக்குவரத்து உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மாற்றம் வரலாம். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வந்தே பாரத் மதுரை ரயில்: வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மதுரை - பெங்களூர் இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை தென்னக ரயில்வே மூலம் கொடுக்கப்பட்டு உள்ளது. 10 மணி நேரத்தில் மதுரை டூ பெங்களூர் செல்லும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.

இன்னொரு திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் இதற்காக டிராக்கை சரி செய்ய வேண்டும்.

குறுகிய வளைவுகளை நீக்க வேண்டும். இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக பணிகள் முடிந்துள்ளன. இதனால் இந்த மாதம் சென்னை - திருநெல்வேலிக்கு 7 மணி நேர ரயில் சேவை தொடங்கப்படும் என்கிறார்கள்.

இது போக சென்னை - விஜயவாடா இடையே புதிய சேவை அக்டோபர் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்படும்.

இது குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக சென்னைக்கு வந்து அதே வழியில் திரும்பும். விஜயவாடா மற்றும் சென்னை இடையே நகரங்களுக்கு இடையேயான ரயிலின் பயண நேரம் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரயிலால் 20 நிமிடங்கள் பயணம் குறையும். சென்னை டூ திருப்பதிக்கு ரயில் வரப்போவதாக செய்திகள் வந்த நிலையில்தான் இந்த விஜயவாடா ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படுக்கை வசதி: இதேபோல் இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கே ரயில்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் படுக்கை வசதியுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+