இன்று எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா தனித்தனியே மரியாதை!
சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி எம்ஜிஆர் சிலைகளுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டவர்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் தனித்தனியே மரியாதை செலுத்தினர்.
நடிகராக ஜொலித்த எம்ஜிஆர் திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். திமுகவில் பொருளாளராக இருந்த எம்ஜிஆர், அதன்பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுகவை அவர் உருவாக்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதல்வரானார்.
திரையுலகத்தில் கொடிகட்டி பறந்த எம்ஜிஆர் அரசியல் களத்திலும் ஜொலித்து முதல்வர் அரியணையில் அமர்ந்தார். இந்நிலையில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

தனித்தனியாக கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் உள்ள எம்ஜிஆர் ரசிகர்கள் பல இடங்களில் அவரது பிறந்தாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். எம்ஜிஆரின் போட்டோக்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் எம்ஜிஆரின் பாடல்கள் இசைக்கப்பட்டு வருகிறது. அதிமுக சார்பில் ஆண்டுதோறும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி மோதல் உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி அதிமுக தலைமை அலுவலகம் வாழை மரங்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

ஓ பன்னீர் செல்வம், டிடிவி, சசிகலா
இதேபோல் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சசிகலா, சென்னை திநகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நினைவிடம் அலங்கரிப்பு
இதற்கிடையே எம்ஜிஆரின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மெரினா கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். வழக்கத்தை விட எம்ஜிஆர் நினைவிடத்துக்கு இன்று ஏராளமானவர்கள் சென்றனர். இதனால் அங்கு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
