Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மதுரை ஆவினில் ரூ.4 கோடி கெட்டுப்போன வெண்ணெய்.. மோசடியா?” சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை ஆவினில் ரூ.4 கோடி மதிப்புள்ள 81 டன் வெண்ணெய் கெட்டுப்போன விவகாரத்தில், நிதி இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர், மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "மதுரை ஆவினுக்கு வடமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 81 டன் வெண்ணெய் கெட்டுப் போய் மிகப்பெரிய நிதியிழப்பை ஏற்படுத்தியிருப்பது கடும் அதிர்ச்சியளிப்பதோடு, இதில் ஆவின் இணைய அதிகாரிகளும், மதுரை மாவட்ட ஆவின் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வருவதால் இந்த மோசடி குறித்து ஆவினில் உள்ள விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை இன்றி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

Milk aavin Tamil nadu

ஏனெனில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பால் விற்பனைக்கு தேவையான அளவை விட கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் வெண்ணெய் கையிருப்பு அதிகமான நிலையிலும் கூட ஆவின் நெய் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பது தற்போது வரை தமிழ்நாடு முழுவதிலும் தட்டுப்பாடாகவே இருந்து வருகிறது.

அதே சமயம் கையிருப்பில் இருந்த வெண்ணெய்யை நெய்யாக உற்பத்தி செய்து வணிகச் சந்தைக்கு விநியோகம் செய்யாமல், வெண்ணெய்யை வெளிச் சந்தையில் அப்படியே விற்பனை செய்து கமிஷன் பார்க்கும் வேலைகளை ஆவின் அதிகாரிகள் ஜரூராக செய்து வருவது கவலைக்குரிய விசயமாகும்.

குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், அம்மாப்பாளையம் பால் பொருட்கள் உற்பத்தி பண்ணையில் மே மாதம் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 250 மெட்ரிக் டன் வெண்ணெய்யும், மற்ற சில மாவட்ட ஒன்றியங்களின் பால் பண்ணைகளில் இருந்து சுமார் 250மெட்ரிக் டன் வெண்ணெய்யும் சேர்த்து சுமார் 26கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 500 மெட்ரிக் டன் வெண்ணெய்யை NCDFI eMarket மூலம் ஆவின் நிர்வாகம் விற்பனை செய்துள்ளது நமது சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது.

ஏனெனில் பால் உற்பத்தி போக உபரியாக இருக்கும் வெண்ணெய் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை பதப்படுத்தி பயன்படுத்தலாம் எனும் போது 5 மாதத்திற்குள் அதனை அவசர, அவசரமாக NCDFI eMarket மூலம் விற்பனை செய்ய வேண்டிய அவசியம் ஆவின் அதிகாரிகளுக்கு ஏன் வந்தது?

அப்படியானால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் சுமார் 500 டன்னுக்கு மேல் வெண்ணெய் கையிருப்பு இருந்துள்ள நிலையில் வடமாநிலத்தில் இருந்து மதுரை ஆவினுக்கு வெண்ணெய் கொள்முதல் செய்திருப்பது முழுக்க, முழுக்க ஆவினை சுரண்டி கொழுத்துப் போன ஆவின் இணையத்தில் (தலைமையகம்) உள்ள நிதிப்பிரிவு, தரக்கட்டுப்பாடு மற்றும் திட்டமிடல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மதுரை ஆவினில் உள்ள முக்கிய அதிகாரிகளின் திட்டமிட்ட கூட்டுக் கொள்ளை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆவின் பால் பண்ணைகளிலும், பால் பொருட்கள் உற்பத்தி பண்ணைகளிலும் வெண்ணெய், பால் பவுடர் எவ்வளவு கையிருப்பில் உள்ளது என்கிற விபரங்கள் இணைய அதிகாரிகளுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் சூழலில் இந்த நிதியிழப்பை ஏற்படுத்திய மோசடி செயல் ஆவின் அதிகாரிகளின் திட்டமிட்ட சதி என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே ஆவினில் கையிருப்பில் இருந்த பல்லாயிரம் டன் பால் பவுடர் மற்றும் வெண்ணையை விற்பனை செய்து விட்டு மகராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுவதாக கூறப்படும் (போலி) கூட்டுறவு பால் நிறுவனங்களில் வெண்ணெய் கொள்முதல் செய்து கோடிக்கணக்கில் கமிஷன் பார்த்து ஆவினுக்கு நிதியிழப்பை ஆவின் அதிகாரிகள் ஏற்படுத்தியிருந்ததால் அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும். முதலமைச்சருக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பலமுறை புகார் மனுக்கள் அனுப்பியும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மீண்டும் அது போன்ற மோசடி செயலை ஆவின் அதிகாரிகள் துணிச்சலுடன் செயல்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு முழுமையாக வழங்காத ஆவின் நிதிப்பிரிவு அதிகாரிகள் பாலுற்பத்திக்கு பயன்படுத்த தேவையான வெண்ணெய்யை மொத்தமாக விற்பனை செய்து அதிலும் ஜிஎஸ்டி மோசடி செய்திருப்பதாகவும் வரும் தகவல்கள் கடும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

"ஒருவன் வெண்ணெய்யை கையில் வைத்துக் கொண்டு நெய்யிற்காக கடை, கடையாய் ஏறி இறங்கிய கதை" போல பால் பண்ணைகளில் தேவைக்கு அதிகமாகவே வெண்ணெய் கையிருப்பில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் யார் யார்? என்பதை கண்டறிந்து ஆவினுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த இழப்பையும் அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்வதோடு, அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+