செம நியூஸ்.. சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ஸ்டேஷனில் வரப்போகுது ‘மால்’.. 33 கோடி டெண்டர் ஒதுக்கீடு!
சென்னை: சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் வணிக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 'மினி மால்' கட்டப்பட உள்ளது. இந்த கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் கட்டுவதற்கான ஒப்பந்தம் ரூபாய் 33 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் தங்களின் பயணத்தை மேற்கொள்ள பெரும்பாலும் மெட்ரோ சேவைகளையே தேர்ந்தெடுக்கின்றனர். பண்டிகை காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூழல்களிலும், நீங்கள் நினைத்த இடத்திற்கு விரைவாகச் செல்ல சூப்பரான சாய்ஸாக சென்னை மெட்ரோ ரயில் சேவை விளங்குகிறது.

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளிடமிருந்து வரும் கட்டண வசூல் மட்டுமின்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. மெட்ரோ ரயில்கள், ரயில் நிலையங்களில் விளம்பரங்கள் மூலம் தற்போது வருவாய் கிடைக்கிறது. ஏற்கனவே, சில நிலையங்களில் கடைகள், கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு இன்றி, மாற்று வழிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. அந்த வகையில், மெட்ரோ வருவாயை மேலும் பெருக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் காலியாக உள்ள இடங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நேரு பூங்கா, அரும்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் உள்ள இடங்களை தனியார் பங்களிப்போடு, வணிக பயன்பாட்டுக்கு அனுமதிக்க திட்டமிடப்பட்டது. சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் தரைதளத்துடன், இரண்டு மாடி வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த வணிக மேம்பாட்டிற்கான கட்டுமான ஒப்பந்தம் BB Developers and Builders நிறுவனத்திற்கு ரூ. 33 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. வணிக வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தம் இன்று வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் வணிக மேம்பாட்டிற்கான கட்டுமான ஒப்பந்தம் ரூ. 33 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் அமைந்துள்ள சைதாப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த வணிக மேம்பாட்டிற்கான கட்டுமான ஒப்பந்தம் BB Developers and Builders நிறுவனத்திற்கு ரூ. 33 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பு கடிதம் (LOA) & Developers and Builile நிறுவனத்திற்கு 9.10.2024 அன்று வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் ஆ.ப அவர்கள் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் தி அர்ச்சுனன் மற்றும் B & Developers and Builders நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சி.பாபி பெனடிக்ட் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் திருமதி ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு, ஆர்.முரளி, நிதி) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஆலோசகர் குழுக்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தனது நிலச் சொத்துக்களின் முழுமையான பயன்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், மெட்ரோ இரயில் நிலையங்களுக்காக எடுக்கப்பட்ட இடங்களில் வணிக வளர்ச்சிக்கான முக்கிய இடங்களைக் கண்டறிந்து பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சியில் இன்று (11.12.2024) சைதாப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகே வணிக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தம் இன்று வழங்கப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications