சின்னவர் போட்டோ எங்கப்பா? உடனே கொண்டு வந்து வைங்க! முதல் நாளே அமைச்சர் ஆவடி நாசர் போட்ட ஆர்டர்!
சென்னை : தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆவடி நாசர் தனது அலுவலகத்தில் முறைப்படி பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் தனது அறையில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் இல்லாததை கண்டு, உடனடியாக அதனை வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில் சிறை சென்ற செந்தில் பாலாஜி விடுதலையான நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருடன் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் உள்ளிட்ட ஒரு அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனை அடுத்து சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் அமைச்சராக ஆவடி மு.நாசர் முறைப்படி பதவி ஏற்று கொண்டார். அரசு கோப்புகளை கையெழுத்திட்ட அவருக்கு அதிகாரிகள் கட்சியினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரை இரண்டு வார்த்தை பேசுங்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நன்றி வணக்கம் என இரண்டு வார்த்தை மட்டும் பேசினார்.
தொடர்ந்து தனது அறையை சுற்றி நோட்டமிட்ட அவர், அங்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் படம் மட்டுமே இருப்பதை கண்டார். தொடர்ந்து சின்னவர் படம் எங்கே? என கேட்ட அமைச்சர் நாசர் உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் படத்திற்கு அருகே உதயநிதி ஸ்டாலினின் படத்தை வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். படத்தை வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம் என அதிகாரிகள் கூறியதை அடுத்து அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆவடி நாசர் தற்போது அமைச்சரவையில் இரண்டாம் முறையாக இடம் பெற்றிருக்கிறார். 2021-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்ற போது அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கிறார். பால் வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவடி நாசர் தனது துறையை முறையாக கவனிக்காததால் அதன் நிர்வாகம் மோசம் அடைந்ததோடு கொள்முதல் விநியோகம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதாகவும் அதுமட்டுமில்லாமல் கட்சியிலும் சில பிரச்சனைகள் இருந்ததால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தமிழக முதல்வருக்கு மிகவும் தீவிர விசுவாசியாக இருந்தவர் ஆவடி நாசர். திமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் பொறுப்பேற்ற காலம் தொடர்ந்து தற்போது வரை அவரது கட்டளைகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றியவர். கடந்த 2023 வரை2 முறை அமைச்சர்கள் மாற்றம் இருந்தது . ஆனால் இலாகா மாற்றம் நடந்ததே தவிர அமைச்சர் அவையில் இருந்து யாரும் நீக்கப்படவில்லை. அந்த வகையில் திமுக ஆட்சியில் முதன் முதலாக பதவியை இழந்தவர் நாசர்.
2011 நகராட்சி சேர்மேனாக இருந்த அவர் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார். 2016 சட்டமன்ற தேர்தலில் மாஃபா பாண்டியராஜனிடம் தோற்ற அவர், 2021ல் அவரை வீழ்த்தினார். இதை அடுத்து முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ஆவின் நிர்வாகம் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறவில்லை என நாசர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து அவரது மகன் ஆஷிம் ராஜா பிரச்சனை காரணமாகவும் நாசருக்கு சிக்கல் எழுந்தது. தலைமை எச்சரித்தும் ஆசிம் ராஜா கண்டுகொள்ளாத நிலையில், அவரது மாநகர செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில் 2023 இல் தொண்டர் ஒருவரை நோக்கி ஆவடி நாசர் கல்வீசிய சம்பவம் தலைமைக்கு நெருக்கடியை உருவாக்கியது. இதை அடுத்து அவர் கட்சியில் சிக்கலை சந்தித்த நிலையில் அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் அமைச்சர் பொறுப்பு ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications