நீ என்ன சாதின்னு பெரியார் என்னிடம் கேட்டார்! பழைய நினைவலைகளில் மூழ்கிய துரைமுருகன்!
சென்னை: பெரியாரை ஒரு முறை சந்திக்கும் போது, நீ என்ன சாதி என்று தன்னிடம் அவர் கேட்டதாக கூறியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல் வன்னியர் சமுதாயத்தின் நிலை குறித்து கதை கதையாக தன்னிடம் பெரியார் விளக்கியதாகவும் இதனால் அன்றே முக்கால்வாசி திக காரராக தாம் மாறிவிட்டேன் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

முப்பெரும் விழா
விருதுநகரில் திமுக தலைமைக்கழகத்தால் நடத்தப்பட்ட முப்பெரும் விழாவை தொடர்ந்து மாவட்ட வாரியாக அது தொடர்பான பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பெரியாரை தாம் சந்தித்த போது நிகழ்ந்த சம்பவத்தை சுவாரஸ்யமாக எடுத்துக் கூறினார்.

பெரியார் கேள்வி
தன்னை பார்த்து உன் பெயர் என்ன என பெரியார் கேட்டதாகவும் அதற்கு துரைமுருகன் என தாம் பதிலளித்ததாகவும் தெரிவித்தார். மேலும், நீ எந்த ஊர் என பெரியார் அடுத்த கேள்வியை கேட்ட போது தமது ஊரை கூறியதாக துரைமுருகன் தெரிவித்தார். அதோடு விடாமல் அடுத்ததாக நீ என்ன சாதி என பெரியார் தன்னிடம் வினவியதாகவும் தானும் தனது சாதியை பெரியாரிடம் கூறியதாகவும் துரைமுருகன் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

வன்னியர் சாதி
தனது சாதியை கேட்டதும் பெரியார் மிகுந்த கவலைப்பட்டதாகவும், ''வன்னியர் என்று பெரிசா நினைச்சு கொள்ளாதே, வன்னியர் சமுதாயத்தின் நிலையும் கவலைக்குரிய வகையில் தான் இருக்கிறது, இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும் என'' தன்னிடம் கதை கதையாக பெரியார் கூறியதாக துரைமுருகன் தெரிவித்தார். பெரியாருடனான இந்த சந்திப்பால் அன்றே முக்கால்வாசி திக காரராக தாம் மாறிவிட்டேன் என துரைமுருகன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர்
இதனிடையே அண்மையில் தன்னை சந்தித்த நண்பர் ஒருவர், தமிழகத்தில் இப்போது யார் தான் எதிர்க்கட்சி தலைவர் என்று கேட்டதாகவும், நானும் அவரைத் தான் தேடிக் கொண்டு இருக்கிறேன் என பதிலளித்ததாகவும் கூறி எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் துரைமுருகன் கலாய்த்தார்.












Click it and Unblock the Notifications