புதிய மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவ சேர்க்கை.. முதல்வரின் முயற்சியே காரணம்.. அமைச்சர் மா.சு
சென்னை: தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சி காரணமாக நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு உச்சமடைந்தது.
இருப்பினும், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் சிறப்பான செயல்பாடுகள் மூலம் கொரோனா 2ஆம் அலையில் இருந்து தப்பித்துக் கொண்டன.

கேரளா வைரஸ் பாதிப்பு
இந்நிலையில், தற்போது நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது நாட்டில் பதிவு செய்யப்படும் ஒட்டுமொத்த கொரோனா வழக்குகளில் கிட்டதட்ட 50% கேரளாவில் மட்டும் கண்டறியப்படுகிறது. இதையடுத்து கேரளா மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்
அதன்படி கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் வேக்சின் போட்டதற்கான சான்றிதழைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 5ஆம் தேதி முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த இரண்டும் இல்லாமல் வருபவர்களுக்குச் சோதனை செய்யும் வகையில் முக்கிய ரயில், விமான நிலையங்கள், எல்லைப் பகுதிகளில் சிறப்பு மருத்துவக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் மா.சு
இதற்காக சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கேரளாவில் தினசரி 20,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறுத. இது தமிழ்நாட்டிற்கு எங்குப் பரவி விடுமோ என்ற அச்சம் சிலருக்கு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 5 நாட்களில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரயில்களில் வந்த 277 பயணிகளிடையே சோதனை நடத்தப்பட்டுள்ளது. வெறும் 13 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவைக் கண்டறியும் வசதி சென்னை விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த 2 நாட்களாகச் செயல்பட்டு வருகிறது.

மாணவர் சேர்க்கை
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் டெல்லி சென்றபோது, தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கோரி பிரதமர் மோடியிடம் நேரில் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சி காரணமாக நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் என மொத்தம் 600 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்த ஆண்டி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வேக்சின் பணிகள்
மற்ற 7 கல்லூரிகளுக்கும் இதேபோல அனுமதி வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அனுமதியும் கிடைக்கும் என்றே நம்புகிறோம். அதேபோல வேக்சின் பணிகளும் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே சென்னையில் தான் அதிக பேருக்கு 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை சென்னையில் 33.43 லட்சம் வேக்சின் போடப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications