ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி! சேகர்பாபு வழியில் அமைச்சர் மூர்த்தி! மதுரையில் அமர்களமான ஏற்பாடுகள்!
அமைச்சர் சேகர்பாபு வழியை பின்பற்றும் அமைச்சர் மூர்த்தி.
சென்னை: அமைச்சர் சேகர்பாபு சென்னையில் நடத்திய ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை போல் மதுரையிலும் நடத்த அமர்களமான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் அமைச்சர் மூர்த்தி.
அமைச்சர் சேகர்பாபுவை போல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும், அனைத்து மாவட்டங்களிலும் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடத்த வேண்டும் என 2 நாட்களுக்கு முன்பு தான் கொங்கு ஈஸ்வரன் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதனிடையே ஸ்டாலினின் குட்புக்கில் தொடர்ந்து இடம்பிடித்து வரும் அமைச்சர் மூர்த்தி, முதல் ஆளாக சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடத்தவிருக்கிறார்.

ஸ்டாலின் பிறந்தநாள்
முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் சிறப்பு புகைப்பட கண்காட்சி ஒன்றை நடத்தியிருந்தார் அமைச்சர் சேகர்பாபு. இந்த கண்காட்சியில் இதுவரை யாரும் பார்த்திராத ஸ்டாலினின் பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை சினிமா, அரசியல், பிரபலங்கள் பலரும் அமைச்சர் சேகர்பாபு அழைப்பின் பேரில் நேரடியாக வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.

அமைச்சர் சேகர்பாபு
அந்த வகையில் இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இன்றைய தலைமுறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் வளர்ச்சியை பற்றி முழுமையாக தெரியாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த புகைப்பட கண்காட்சி அவர் பட்ட துயரங்களையும், படிபடியாக மெருகேற்றிக்கொண்டு முன்னேறியதையும் நிச்சயம் இளம் தலைமுறைகளுக்கு விளக்கும் எனவும் கூறியிருந்தார்.

அமைச்சர் மூர்த்தி
அதோடு மட்டுமின்றி தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் முதல் ஆளாக சென்னைக்கு அடுத்த படியாக மதுரையில் ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை அமைத்து வருகிறார் அமைச்சர் மூர்த்தி. இதற்காக அமைச்சர் சேகர்பாபு அனுமதியின் பேரில் சென்னையிலிருந்து அனைத்து புகைப்படங்களையும் மதுரைக்கு பேக் செய்துவிட்டார் அமைச்சர் மூர்த்தி.

புகைப்பட கண்காட்சி
மதுரைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகள், தென் மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் பார்க்கும் வண்ணம் இந்தக் கண்காட்சி 10 நாட்களுக்காவது நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல மதுரையை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் இந்தக் கண்காட்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications