அதிமுகவுக்கு எரிச்சல்... குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை போல் - அமைச்சர் பெரியகருப்பன்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கற்பனையாக அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அதற்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துகொள்வதாகவும் கூறியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன்.
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் இருக்கிறது அதிமுகவின் அறிக்கை என அவர் சாடியுள்ளார்.
ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.க்கு இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் விடுத்துள்ள பதிலடியில்;

கைப்பாவை
தேர்தலை ஜனநாயக முறையில் நேர்மையாக, நடுநிலையோடு, நடத்திய தமிழகத் தேர்தல் ஆணையத்தை கொச்சைப்படுத்துகின்ற வகையில் வெளியிட்டுள்ள அதிமுகவின் கற்பனை அறிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கடந்த 2016-ல் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை மூன்று வருடம் தள்ளிப் போட்டது அதிமுக அரசு. மாநிலத் தேர்தல் ஆணையம் 26.9.2016-ல் அறிவிப்பு வெளியிட்ட அன்றே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அந்த ஆணையத்தைத் தனது கைப்பாவையாக்கியது அதிமுக.

வார்டு மறுவரையறை
தேர்தல் நடத்துகிறோம் என, உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று 'வார்டு மறுவரையறை ஆணையத்தை' உருவாக்கி, அவசரச் சட்டம் பிறப்பித்து உள்ளாட்சித் தேர்தலை வேண்டுமென்றே தாமதம் செய்தது அதிமுக அரசு. பிறகு மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த விடாமல் செய்தது அதிமுக அரசு.

கற்பனை குதிரை
ஒருவர் இரு வேட்பாளருக்கு முன்மொழிந்த காரணத்தால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வேட்பு மனுவைத் தேர்தல் ஆணையம் விதிப்படி நிராகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான பாஸ்கரபாண்டியன் 'வாக்கு எண்ணிக்கை நாளன்று நான் சொல்லக்கூடிய வேட்பாளர்களைத்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்' எனக் கூறியதாக ஒரு கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஒரு காரணம் சொல்லியிருக்கிறார்கள்.

அபாண்ட பழி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இப்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. அங்கு அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. எத்தகைய அபாண்டப் பழியை, பொய்யை ஒரு மாவட்டத் தேர்தல் அதிகாரி மீது சுமத்துகிறார் எடப்பாடி பழனிசாமி என்பது அதிமுகவும் அங்கு வெற்றி பெற்றுள்ளதிலேயே தெரியவருகிறது.

சொந்தக் கட்சி
திருப்பத்தூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அத்துமீறி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றதாகக் கூறியிருக்கிறார். அந்த புகாரைத் தொடர்ந்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரே அந்த வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்று, 'வாக்குப் பெட்டிகள் பத்திரமாக இருக்கின்றன, எதுவும் பிரிக்கப்படவில்லை' என்று கூறியிருக்கிறார். தன் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் சொன்னதைக் கூட ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிந்துகொள்ள முன்வரவில்லை.

5 பக்க அறிக்கை
இருவரும் கொடுத்துள்ள 5 பக்க அறிக்கையில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதாக, ஒரு நிகழ்ச்சியைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை. இதிலிருந்தே மாநிலத் தேர்தல் ஆணையம் அமைதியாகவும், நடுநிலையுடனும் தேர்தலை நடத்தியுள்ளது எனத் தெளிவாகிறது. கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மாநிலத் தேர்தல் ஆணையத்தைத் தங்களின் கைப்பாவையாக ஆட்டிப் படைத்த, பழைய ஞாபகத்தில் இந்தக் கற்பனைக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள்.

எரிச்சல்
தோல்வியை ஒப்புக் கொள்ளவும், மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவும் இருவருக்கும் மனமில்லை. திமுக ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை மக்கள் அளித்து விட்டார்கள் என இருவருக்குமே எரிச்சல்.
இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications