பேருந்து கட்டணம் உயர்வு?-அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்
சென்னை: டீசல் விலையேற்றம் காரணமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பஸ் டிக்கெட் உயர்வு குறித்து முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சென்னை பல்லவன் சாலை மாநகர போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆபிரகாம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்ட பிறகு, பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

வருவாயைப் பெருக்க நடவடிக்கை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 16 பணிமனைகள் மேம்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அடையாறு, திருவான்மியூர் மந்தைவெளி, தாம்பரம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், வில்லிவாக்கம், சென்ட்ரல், வள்ளலார் நகர், திருவொற்றியூர், வியாசர்பாடி உள்ளிட்ட 16 பணிமனைகளை மேம்படுத்த உள்ளோம். வணிக வளாகம், உட்கட்டமைப்பு என வருவாய் பெருகும் வகையில் கட்டமைக்கப்படும்.

பெண் பயணிகள்
மேலும் தமிழ்நாடு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் அதிகரித்த பிறகு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் வாரநாட்களில் சராசரியாக 7.5 லட்சம் பேரும், திங்கட்கிழமை சராசரியாக 8 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர். இந்த இலவச பயணத் திட்டத்தால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும் கூட தற்போது பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தீபாவளி போனஸ் எப்போது
போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியானதும் பேச்சுவார்த்தை தொடங்கும். தொழிலாளர் பிரச்சனை குறித்து கமிட்டி துவங்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும். போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக 6000 ஓட்டுநர் நடத்துநர் நியமிக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி போனஸ் குறித்து நிதித் துறையோடு ஆலோசிக்கப்பட்டு விரைவில் பேச்சுவார்த்தை துவங்கப்படும்.

டீசல் விலை உயர்வு
டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக் கழகம் கடுமையாகப் பாதிக்கிறது. அரசு பேருந்துகளில் தினசரி 1.15 கோடி பேர் பயணிக்கிறனர். டீசலுக்கான மானியத்தை அரசு வழங்கினாலும் கூட தொடர்ந்து டீசல் விலை அதிகரிப்பதால் போக்குவரத்துத் துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

பஸ் கட்டணம் உயர்வு?
மேலும், பஸ் கட்டணத்தை தற்போது உயர்த்துவதற்கான எண்ணம் இல்லை. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நிதித்துறையுடன் பேச்சுவார்த்தை குழு போடப்பட்டு, விரைவில் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். போக்குவரத்துத் துறையில் தீபாவளி பண்டிகையொட்டி இனிப்பு வழங்குவது தொடர்பாகத் தனியாரிடம் டெண்டர் விடப்படும். அதனடிப்படையில் டெண்டர் யாருக்குக் கொடுப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். தனியார் நிறுவனத்தை விட ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் வழங்கினால், ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் விடுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்
தீபாவளி சமயத்தில் தேவைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். புதிதாக 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பெண்களின் இலவச பயணத்திற்காக 7500லிருந்து 8000 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications