“இவரே பாம் வைப்பாராம்.. இவரே எடுப்பாராம்”.. எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ரகுபதி அட்டாக்!
சென்னை: "பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே" என்ற கணக்கில் அவசர அவசரமாக எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்வதும், அதனை அதிமுகவினர் பரப்புவதும் குற்றவாளி அதிமுகதான் என்ற உண்மை வெளியானவுடன் அமைதி காப்பதும் என ஒரே 'பேட்டர்ன்' தான் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக செய்தி வெளியானது. ஜோதிவேல் என்பவர் நடத்தி வந்த பாரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ரவி என்பவர் வீடியோ வெளியிட்டார். விசாரணையில் அவர் முன்விரோதத்தால் போலியாக காணொலி வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அதிமுக நிர்வாகியான ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து கடுமையாக அறிக்கை விட்டிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. "திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா ? தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா ஸ்டாலின் அவர்களே ?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், வீடியோ வெளியிட்டவர் அதிமுக நிர்வாகி என்றும், அவர் பொய்யான குற்றச்சாட்டை சொன்னதும் விசாரணையில் தெரியவந்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளர் அமைச்சர் ரகுபதி.
இதுதொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் வளையமாதேவியில் டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வீடியோ ஒன்று வெளியானது. அதனை எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு 'அய்யகோ, திமுகவை பாருங்கள்' என்று எழுதியிருந்தார்.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் வீடியோவை வெளியிட்டது அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க வட்ட செயலாளராக இருந்த ராஜாவின் உறவினரான ரவி என்பவர் என்பதும் அவருக்கு கள்ளச் சாராயம் வாங்கி வந்து கொடுத்ததே அதிமுகவின் ராஜா தான் என்பதும் விசாரணையில் தெரியவந்து அந்த அதிமுக பிரமுகர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக எடப்பாடி முன்வைத்த குற்றச்சாட்டுகளான சென்னை அண்ணா நகர் பாலியல் வழக்கு, காரில் திமுக கொடிகட்டிய ரவுடிகள் தொடங்கி நேற்றைய கள்ளச்சாராய வீடியோ வரை குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அடுத்த நாளே அவர்கள் அதிமுகவினர் எனத் தெரிய வருகிறது; கைது செய்யப்படுகிறார்கள்.
பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்ற கணக்கில் அவசர அவசரமாக எடப்பாடி ட்வீட் செய்வதும், அதனை அதிமுகவினர் பரப்புவதும் உண்மை வெளியானவுடன் அமைதி காப்பதும் என ஒரே 'பேட்டர்ன்'தான். ஒரு அஜெண்டாவுடனேயே செயல்பட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
எதிர்க்கட்சித் தலைவர் என்பது அரசியலில் முக்கியமான பொறுப்பு. ஆனால் சொந்த கட்சியினர் ஒரு குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தால் உடனே அரசை குறை கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு அந்த சம்பவத்தையே திசை மாற்றி மக்களை குழப்பம் பணியைத்தான் எடப்பாடி செய்து வருகிறார். ஒருவேளை 'செட்டிங்' செய்கிறார்களோ என்றும் சந்தேகம் வருகிறது. இப்படிப்பட்ட மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications