அன்று நிறுத்திவைத்தார்.. இன்று அவருக்காகவே முதல்வரிடம் பேசும் செந்தில் பாலாஜி! அரசியலில் சாதாரணமப்பா
சென்னை: மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானியை மாற்ற வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜியே முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் விரைவில் பெரிய அளவில் அதிகாரிகள் மாற்றம் நடைபெற இருக்கும் நிலையில், தனது துறையின் அதிகாரியை மாற்ற வேண்டாம் என செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2016ல் தான் போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைத்த அதிகாரியை மாற்ற வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
“நிறுத்திருங்க.. இனி பேசிக்கிட்ருக்க மாட்டேன்” முதல்வரிடம் புகார்.. கவுன்சிலர்களுக்கு பறந்த உத்தரவு!

ராஜேஷ் லக்கானி
ராஜேஷ் லக்கானி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக கடந்த 2015-ஆம் ஆண்டு பொறுப்புக்கு வந்தார். பொறுப்புக்கு வந்ததுமே தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு என தீவிரம் காட்டினார். கல்லூரிகளில் சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களைச் சேர்த்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலின்போது பணப் பட்டுவாடா தறிகெட்டு நடந்த நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவை நிறுத்திவைத்தார் லக்கானி. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே பணப் பட்டுவாடாவால் தேர்தலை நிறுத்தியது அதுவே முதல்முறை.

வேண்டவே வேண்டாம்
பின்னர் ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க ஓபி.எஸ் அணி, தினகரன் அணி, தி.மு.க என மும்முனையிலும் பாய்ந்த பணப் பட்டுவாடாவை ராஜேஷ் லக்கானியால் தடுக்க முடியவில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு லக்கானி பரிந்துரை செய்ததன்பேரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நீடிக்க விருப்பம் இல்லை என மேலிடத்தில் தெரிவித்தார்.
பின்னர் இடைத்தேர்தல் முடிந்தபிறகே அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றினார் ராஜேஷ் லக்கானி.

ஸ்டாலினுக்கும்
ஆட்சிக்கு வந்த பிறகு, வேகமாகச் செயல்படும் நல்ல அதிகாரிகளின் லிஸ்ட் எடுத்து, அவர்களையே முக்கிய துறைகளின் செயலர்களாக நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த லிஸ்ட்டின் படியே தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், விரைவில் பெரிய அளவில் அதிகாரிகள் மாற்றத்திற்கு திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ராஜேஷ் லக்கானியை தலைமை செயலகத்தில் முக்கிய பொறுப்புக்கு அழைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.

செந்தில் பாலாஜி வேண்டுகோள்
இதை அறிந்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆட்சிக்கு வந்தது முதல் மின்சாரத்துறையின் மீது பல விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இப்போதுதான் மின் உற்பத்திக்கான திட்டங்களைத் தீட்டி உற்பத்தியை அதிகரித்து வருகிறோம். இந்த நேரத்தில் ராஜேஷ் லக்கானியை மாற்றினால் பணிகள் சுணக்கமடையலாம். கொஞ்ச நாளைக்கு அவரே இருக்கட்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரும் அவரது கருத்தை கவனத்தில் கொள்வதாக கூறியிருக்கிறாராம். இதனால், இப்போதைக்கு ராஜேஷ் லக்கானி மாற்றப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள்.

செந்தில் பாலாஜி - லக்கானி
2016 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டவர் செந்தில் பாலாஜி. அவர் தனது தொகுதியில் தண்ணீராக இறைத்த பணமே அன்று தேர்தல் நிறுத்திவைக்கப்படக் காரணம்.
பின்னாளில் அவர் தி.மு.கவில் இணைந்து அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ ஆனார். 2021ல் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது மின் துறை அமைச்சராக உள்ள நிலையில், அதே துறையின் தலைவராக இருக்கிறார் ராஜேஷ் லக்கானி. இப்போது இவர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளதாம். அதனால்தான் இவரை மாற்ற வேண்டாம் என அமைச்சரே முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.