கோவை மக்களை தவிக்க விட்ட சேரன் எக்ஸ்பிரஸ்.. அமைச்சர் சாமிநாதனும் தப்பவில்லை.. ஆவடியில் என்ன நடந்தது?
சென்னை: கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தனது சொந்த ஊரான திருப்பூர் செல்வதற்காக சென்னை ஆவடிக்கு இரவு 10:30-க்கு அமைச்சர் சாமிநாதன் வருகை தந்தார். ஆனால் கனமழை காரணமாக ரயில்கள் சரியான நேரத்திற்கு வந்து சேரவில்லை.. இரவு முழுவதும் ரயில் நிலையத்தில் அமைச்சர் சாமிநாதன் காத்திருந்தார். அதிகாலை 2 மணிக்கு தான் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், ஆவடியில் இருந்து புறப்பட்டது. அதில் காத்திருந்து ஏறி அமைச்சர் சாமிநாதன் புறப்பட்டு சென்றார்.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் வட மாவட்டங்களையொட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் உள்ள பல்வேறு சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது. ஆவடி, அம்பத்தூர், வேளச்சேரி, அரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, துரைப்பாக்கம், ஓஎம்ஆர் சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை என சென்னையின் பல பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் ஆறு போல் ஓடின. சென்னையில் ரயில் நிலையங்களிலும் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டது.

கனமழை காரணமாக சென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியது. அதிகப்படியான மழை மற்றும் தண்ணீர் தேங்கியபடியே இருந்த காரணத்தால், ரயில்களை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்க முடியாத நிலை ஒருகட்டத்தில் ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட வேண்டிய சப்தகிரி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு புறப்பட வேண்டிய ஏற்காடு எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் குறைவான வேகத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் ரயில்கள் தாமதம் ஆகின. வானிலை நிலவரத்தை பொறுத்து, ரயில்கள் பகுதி நேரமாக அல்லது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு வந்தன,

அதேநேரம் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலில் இருந்து புறப்படாமல் ஆவடியில் இருந்து புறப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினார்கள். இதேபோல் திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் செல்லும் ரயில்களும் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. இதன் காரணமாக வெளி மாவட்டம் செல்லும் மக்கள் ஆவடி ரயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்தார்கள். ஆனால் ஆவடிக்கு, ரயில்கள் வந்துசேர தாமதம் ஆனதால் ஆயிரக்கணக்கான பயணிகள் நள்ளிரவில் காத்திருந்து அவதிக்குள்ளாகினார்கள். ஆவடி ரயில் நிலையத்தில் நடைமேடைகள், நடைமேம்பாலத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் ஆவடி ரயில் நிலையமே நெரிசலில் விழிபிதுங்கியது.
இந்த சூழலில் அமைச்சர் சாமிநாதன் கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தனது சொந்த ஊரான திருப்பூர் செல்வதற்காக சென்னை ஆவடிக்கு இரவு 10:30 வந்த வருகை தந்தார். ஆனால் கனமழை காரணமாக ரயில்கள் சரியான நேரத்திற்கு வராத காரணத்தால் இரவு முழுவதும் ரயில் நிலையத்தில் அமைச்சர் சாமிநாதன் பயணிகளுடன் காத்திருந்தார். அதிகாலை 2 மணிக்கு தான் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், ஆவடியில் இருந்து புறப்பட்டது. அதில் காத்திருந்து ஏறி அமைச்சர் சாமிநாதன் புறப்பட்டு சென்றார். பொதுமக்களும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி புறப்பட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications