750 பேருந்துகள் கூடுதலாக இயங்கும்.. கிளாம்பாக்கத்தில் இருந்து 550 பஸ்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்!
சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வார இறுதி விடுமுறையை ஒட்டி நாளை முதல் 750 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

வார இறுதி விடுமுறை மற்றும் முகூர்த்த நாளையொட்டி, 16ஆம் தேதி அதாவது நாளை முதல் 18ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 16ஆம் தேதி கூடுதலாக 550 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரில் இருந்து 200 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 19ஆம் தேதி திங்கட்கிழமை சுபமுகூர்த்த நாள் என்பதால் அதற்கு முந்தைய 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) 17ஆம் தேதி சனிக்கிழமை, 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் வெளியூர்களுக்குச் செல்ல பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை நகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து முனையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பேருந்து முனையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குப் பதிலாக தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications