பன்றியை போல் குட்டிப் போட்டு.. வடமாநில கூட்டம் பெருகியுள்ளது.. தா.மோ.அன்பரசன் சர்ச்சை பேச்சு!
சென்னை: வடமாநிலத்தவர்கள் பன்றி குட்டிப் போட்டதை போல் போட்டு மக்கள் தொகையை அதிகரித்துவிட்டார்கள் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக கூறிய அவர், குடும்பக் கட்டுபாட்டு திட்டத்தை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பாக ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் தாமோ அன்பரசன், சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் தாமோ அன்பரசன் வடமாநிலத்தவர்கள் குறித்து பேசியது சர்ச்சையாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக திமுக தரப்பில் தொடர்ந்து பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகும் நிலை உருவாகி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டிற்கான நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படவோ அல்லது வடமாநிலங்களுக்கு அதிகரிக்கவோ வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக தொகுதிகளை பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அமைச்சர் தாமோ அன்பரசன் பேசுகையில், வடமாநிலத்தில் இருப்பவர்கள் பன்றி குட்டிப் போட்டது போல் போட்டு, மக்கள் தொகையை அதிகரித்துள்ளார்கள்.
இப்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு என்று கூறுகிறார்கள். இதனால் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது. 1960களில் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவுக்கு பின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் என்றார்கள். பின்னர் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றார்கள்.
தென் மாநிலங்கள் சரியாக அந்த திட்டத்தை செயல்படுத்தி மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்துள்ளோம். ஆனால் வடமாநிலத்தவர்கள் அப்படியில்லை. இதனால் தென் மாநிலங்களில் மட்டும் சுமார் 40 தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், தென் மாநிலங்களில் பாஜகவால் வெற்றிபெற முடியவில்லை.
இங்கே தொகுதியை குறைத்துவிட்டால், வடமாநிலங்களில் தொகுதியை அதிகரித்து நாமே ஆட்சியில் இருக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்விக்காக மட்டும் ரூ.2,150 கோடியை மத்திய அரசு கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கும் பணம் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications