பற்ற வைத்த ஆளுநர்.. திரண்டு வந்த திமுக! "தமிழ்நாட்டை அரணாக காத்து நிற்போம்”.. உதயநிதி பரபர ட்வீட்!
சென்னை : தமிழ்நாடு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் ஆளுநரின் கருத்துக்கு எதிராக பதிவிட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தமிழ்நாடு என்று கூறுவதைவிட தமிழகம் என்று கூறுவதே சரியானது என்று தெரிவித்தார்.
ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், திமுகவினர் பலரும் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஆளுநர் பற்றவைத்த சர்ச்சை
ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்." எனப் பேசினார். ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அரணாக காத்து நிற்கும்
இதுகுறித்து அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல்- மொழியியல்- அரசியல்- பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்!" எனத் தெரிவித்துள்ளார்.

என்றும் தமிழ்நாடுதான்
நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி, "நம் மொழி - பண்பாடு - அரசியல்- வாழ்வியலின் அடையாளம் "தமிழ்நாடு". அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்!" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெற்றவர்களுக்கு தெரியாதா?
இதேபோல் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "பிள்ளைக்கு பெயர் சூட்ட பெற்றவர்களுக்கு தெரியாதா? தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பிகள் அண்ணாவின் தலைமையில் 1968 ஜூலை 18ல் தமிழ்நாடு என பெயர் சூட்டும் சட்டத்தை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றினர். தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கும் பாஜக தமிழ்நாட்டில் வேரோடு அழிந்தே தீரும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ட்ரெண்டாகும் தமிழ்நாடு
மேலும், தமிழக அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும், "#தமிழ்நாடு வாழ்க!" என ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனக் குரலை எழுப்பி வரும் நிலையில், நெட்டிசன்களும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு எதிராக தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications