மதுரை எய்ம்ஸ் பணிகள்.. மக்கள் செங்கலை எடுக்கும்முன் வேலையை தொடங்குங்கள்.. உதயநிதி ஸ்டாலின்!
மதுரை எய்ம்ஸ் பற்றி அமைச்சர் உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: மதுரை மக்கள் தங்களின் கைகளில் செங்கலை எடுக்கும் முன் மத்திய அரசு எய்ம்ஸ் கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் மதுரை எய்ம்ஸ் செங்கல் விவகாரம் நாடாளுமன்றம் வரை பேசப்படுவதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், ஈரோடு இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.
சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு அலுவலர்கள் பங்கேறும் 2022-23ம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த கிரிக்கெட் போட்டியில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ், ரயில்வே மற்றும் வருமான வரித்துறை ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன. இன்று தொடங்கி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளது. இறுதியாக மார்ச் 12ம் தேதி இறுதிப்போட்டி நடக்க உள்ளது.

கிரிக்கெட் போட்டி
இன்று நடைபெறும் போட்டியில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அணிகள் விளையாடுகின்றன. முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்கு முன் 6 அணி தலைவர்கள் மற்றும் இன்று விளையாட உள்ள 2 அணிகளின் வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் மைதானத்திற்கு உள்ளே சென்று டாஸ் போட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கிரிக்கெட் விளையாடிய உதயநிதி
இதன் பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரும், அமைச்சர் பொன்முடி மகனுமான அசோக் சிகாமணி பந்துவீச, உதயநிதி ஸ்டாலின் பேட்டிங் செய்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் விளையாடியது பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு கிரிக்கெட் போட்டியை நான் தொடங்கி வைத்துள்ளேன். கடந்த ஒன்றரை மாதங்களாக பல்வேறு மாவட்டங்களின் விளையாட்டு அரங்கங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளேன்.

பட்ஜெட் பற்றி உதயநிதி ஸ்டாலின்
அதுமட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்கள் தரப்பிலும் ஏராளமான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனை அனைத்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கையாக வைத்துள்ளேன். நிச்சயம் வரும் பட்ஜெட்டில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையில் நல்ல அறிவிப்பு வரும் என்று தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ்
தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் பற்றிய கேள்விக்கு, நாடாளுமன்றம் வரை மதுரை எய்ம்ஸ் செங்கல் விவகாரம் பேசப்பட்டு வருகிறது. மதுரை மக்கள் செங்கலை கையில் எடுக்கும் முன் மத்திய அரசு எய்ம்ஸ் கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications