அமைச்சர் பதவி.. நோ சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. ஏமாற்றத்தில் உதயநிதி
அமைச்சர் பதவி இப்போதைக்கு கிடைக்காது என்பதால் ஏமாற்றத்தில் இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை: உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் அதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றது. அப்போதே அமைச்சரவையில் உதயநிதியின் பெயர் இடம் பெறும் என்று எதிர்பார்த்தனர் அவரது ஆதரவாளர்கள். திமுக ஆட்சி பதவியேற்று ஓராண்டு முடிவடைந்து விட்டது.
நல்ல நாள் பார்த்து நல்ல செய்தி அறிவிப்பு வரும் என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். உதயநிதியை அமைச்சராக்க மாவட்டங்களில் நிர்வாகிகள் தீர்மானம் கூட நிறைவேற்றி விட்டனர். ஆனால் அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியானதாக தெரியவில்லை.

எய்ம்ஸ் செங்கல்
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது கையில் ஒரு செங்கலை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் உதயநிதி. இயல்பான பேச்சு பலரையும் ரசிக்க வைத்தது. இளைஞரணி செயலாளர் விரைவில் அமைச்சாராவார் என்று அப்போதே பேசினர் அவரது ஆதரவாளர்கள்.

ஆனந்த கண்ணீர்
திமுக ஜெயித்து முதல்வராக பதவியேற்றார் மு.க ஸ்டாலின். அமைச்சரவையில் இடம்பெற்றார் அவரது நண்பர் அன்பில் மகேஷ். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்ற போது ஆனந்த கண்ணீர் விட்டார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி அமைச்சராவார்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது பேட்டியில் விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பார் என்று கூறினார். தொடர்ந்து பல அமைச்சர்கள் அதை வழி மொழிந்தனர். ஒராண்டு முடிந்த பின்னரும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

கட்சியில் தீர்மானம்
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அப்படி எதுவும் தீர்மானம் நிறைவேற்றி தர்மசங்கடத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் உதயநிதி. கட்சி தலைமை பதவி தரும்போது ஏற்றுக்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

வருங்கால முதல்வர்
உதயநிதி ஸ்டாலின் இன்னும் அமைச்சராகவே பதவியேற்கவில்லை அதற்குள் வருங்கால முதல்வர் என்று கூறிவிட்டார் அவரது நண்பரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. சில நாட்களுக்கு முன்பு பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் இளைய சமுதாயத்தை பட்டை தீட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திராவிட மாடல் பாசறைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். வருங்காலத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி செய்ய போகிறவர் உதயநிதி ஸ்டாலின் தான் என்றும் தெரிவித்தார்.

சின்னவர் என்று அழையுங்கள்
தமிழகத்தில் திமுக நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் உதயநிதி படத்துடன் இளைஞரணியினர் போஸ்டர்கள், பேனர்களை அமைக்கின்றனர். அதில் பல்வேறு பட்டப்பெயர்களையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். "மூன்றாவது கலைஞர்" என்றும் பட்டம் கொடுத்துள்ளனர். அப்படி எல்லாம் அழைக்க வேண்டாம் என்றும், இனி சின்னவர் என்று அழைத்தாலே போதும் என்றும் கூறியிருக்கிறார் மு.க ஸ்டாலின்.

அமைச்சர் பதவி இல்லை
உதயநிதி ஸ்டாலினுக்கு இப்போதைக்கு அமைச்சர் பதவி தர தயாராக இல்லையாம் முதல்வர் முதல்வர் ஸ்டாலின். கரணம் வாரிசு அரசியல் என்ற பெயர் வேண்டாம் என்று நினைக்கிறாராம். இலங்கையில் நடந்த சம்பவங்களும், மகாராஷ்டிராவில் தற்போது நடந்து வரும் சம்பவங்களும் யோசிக்க வைத்திருக்கிறதாம்.

ஏமாற்றத்தில் சின்னவர்
கிரகமாலிகா யோகம் கை கூடி வந்துள்ளதால் விரைவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் வாரிசு அரசியலால் ஏற்பட்ட சிக்கல்களைக்கூறி முதல்வர் ஸ்டாலின் நோ சொன்னதால் ஏமாற்றத்தில் இருக்கிறாராம். நேரம் காலம் கைகூடி வந்தால் பதவி தானாக தேடி வரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications