சட்டசபையில் நகராட்சி, ஊரக வளர்ச்சி துறைகள் மீது விவாதம்.. புதிய அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர்கள்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் கேள்விகளுக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
தமிழ்நாடு சட்டசபை மார்ச் 20ஆம் தேதி கூடியது. அன்று 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதையடுத்து 21ஆம் தேதி 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டசபை கூட்டத்தொடர்
இதைத் தொடர்ந்து 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் ஆகிய 2 பட்ஜெட்கள் மீது விவாதம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்கினர். பின்னர் நேற்று முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியுள்ளது. முதல் நாளில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை நடைபெற்றது.

துரைமுருகன் பேச்சு
நீர்வளத்துறை மீதான விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், என்னை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலம் திமுகவில் இருந்தவன் நான். இன்னும் இருக்கப் போகிறவன். என்றைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன். மறைந்துவிட்ட அன்றைக்கு எனக்கென்று எடுக்கிற சமாதியில், 'கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான்' என்று ஒரு வரி எழுதினால் போதும். என் தலைவர் கலைஞரின் கோபாலபுரத்து விசுவாசியாக வாழ்ந்தேன். இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

புதிய அறிவிப்புகள்
போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு 50% சலுகை,
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கென நான்கு இருக்கைகள் பிரத்யேகமாக ஒதுக்கப்படும்,
பேருந்து பணிமனைகளில் உணவகங்கள் நடத்த மகளிர் சுய உதவி குழுக்கள் முன் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.

இன்றைய மானியக் கோரிக்கை
அதேபோல் சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறையும், ஊரக வளர்ச்சி துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் கேள்விகளுக்கு பதிலளித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.












Click it and Unblock the Notifications