வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் குளறுபடி செய்த ரயில்வே.. சென்னை பயணி செய்த தரமான செயல்!
சென்னை: ரயிலில் புக் செய்த சென்னை பயணி ஒருவருக்கு முதலில் டிக்கெட் கன்பார்ம் ஆனதாக ரயில்வேயில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த குறுஞ்செய்தியில் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த நபர் கொடுத்த மனுவின் பேரில், அவருக்கு ரயில்வே நிர்வாகம் இழப்பீடாக ரூ.20 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ரயில் டிக்கெட் கட்டணம் ரூ. 4,000 திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், வழக்கு செலவிற்கு ரூ. 5,000 வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
சென்னை பெருமாள் முதலி தெருவை சேர்ந்தவர் திலீப் குமார். இவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

வெயிட்டிங் லிஸ்ட்
கடந்த 23.06.2024 அன்று ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்வதற்காக என் குடும்பத்தினர் 9 பேருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று டிக்கெட் முன்பதிவு செய்தேன். ஆனால் 9 பேருக்கும் வெயிட்டிங் லிஸ்டில் தான் டிக்கெட் கிடைத்தது. 23 ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் புறப்படுவதாக இருந்தது.
நான் காலையிலேயே டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததால், காலை 7 மணியளவில் முன்பதிவு டிக்கெட்டில் 4 டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 5 டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் ரயில்வே நிர்வாகத்தின் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதனால் நான் அதற்கு ஏற்றவாறு பயணத் திட்டங்களை மாற்றியமைத்தேன்.
இழப்பீடு வழங்க கோரி மனு
இதற்கிடையே ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து மீண்டும் ஒரு குறுஞ்செய்தி காலை 10.54 மணிக்கு வந்தது. அந்த குறுஞ்செய்தியில் அனைத்து டிக்கெட்டுகளும் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் ரயில் புறப்படுவதற்கு முன்பாக எங்கள் பயண டிக்கெட்டை ரத்து செய்து உரிய கட்டணத்தை பெற முடியாமல் போனது.
இதனால் நான், எனது குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானோம். ரயில்வே நிர்வாகம் செய்த குளறுபடியே இதற்கு காரணம். எனவே எனக்கு ரயில் பயண கட்டணத்துடன் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ரயில்வேக்கு அபராதம் விதித்து உத்தரவு
இந்த மனுவானது, ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "120 பேர் பயணம் செய்யும் வகையிலான ரயில் பெட்டி சில காரணங்களால் 104 பேர் பயணிக்கும் பெட்டியாக மாற்றப்பட்டது.
இதன் காரணமாகவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. எனினும் இந்த மாற்றம் தொடர்பாக பயணம் செய்வதற்கு முன்கூட்டியே சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவலானது அனுப்பப்பட்டது. எனவே இதில் எந்த ஒரு குளறுபடியும் ஏற்படவில்லை" என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ரயில்வே நிர்வாகத்தின் குளறுபடியான குறுஞ்செய்தி காரணமாகவே மனுதாரரின் ரயில் பயணம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே ரயில் டிக்கெட் கட்டணம் ரூ. 4,000 திருப்பி அனுப்ப வேண்டும். இதேபோன்று சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.20,000 வழங்க வேண்டும், வழக்கு செலவிற்கு ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications