பிறப்பு சான்றிதழ் இல்லையா? பல வருடங்கள் கழித்தும் வாங்கலாம்.. பெயர் தவறையும் திருத்தலாம்!
சென்னை: குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்காமல் விட்டுவிட்டீர்களா? வாங்கிய சான்றிதழில் குழந்தையின் பெயர் இல்லையா? அப்பா, அம்மா பெயரில் தவறு இருக்கிறதா? இதற்காக இனி கவலைப்பட வேண்டாம். பல வருடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைக்குக்கூட பிறப்புச் சான்றிதழ் பெற வழி இருக்கிறது. அதேபோல ஏற்கனவே வாங்கிய சான்றிதழில் விடுபட்ட பெயரைச் சேர்க்கவும், தவறான விவரங்களைத் திருத்தவும் சில நடைமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்ய வேண்டும். இந்த காலத்துக்குள் பதிவு செய்ய முடியாவிட்டாலும் வாய்ப்பு இருக்கிறது. 21 நாட்களைக் கடந்தும் 30 நாட்களுக்குள் பதிவு செய்தால் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். 30 நாட்களைக் கடந்தும் ஒரு வருடத்துக்குள் பதிவு செய்ய, உரிய அதிகாரியின் எழுத்துப்பூர்வ அனுமதி, தேவையான ஆவணங்கள் மற்றும் தாமதக் கட்டணம் தேவை.

பிறப்புச் சான்றிதழ் அவசியம்
ஒரு வருடத்தைக் கடந்த பிறப்பையும் பதிவு செய்யலாம். ஆனால் அதற்கான நடைமுறை, பிறப்பு நடந்த காலத்தைப் பொறுத்து மாறும். ஒரு வருடத்துக்கு மேல் 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய, அந்தப் பகுதியின் மாவட்ட மாஜிஸ்திரேட், சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அல்லது மாவட்ட மாஜிஸ்திரேட்டால் அதிகாரம் வழங்கப்பட்ட எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் உத்தரவு வழங்க வேண்டும்.
2 ஆண்டுகளை கடந்த பிறப்பை பதிவு செய்ய, அந்தப் பகுதியின் முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் உத்தரவு அவசியம். 2 நிலைகளிலும் பிறப்பு நடந்ததற்கான விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே பதிவு செய்யப்படும். இதற்கான விண்ணப்பத்தை பிறப்பு நடந்த இடத்துக்கான பிறப்பு, இறப்பு பதிவாளரை அணுகி அளிக்க வேண்டும்.
குழந்தையின் பெயர் சான்றிதழில் இல்லையா?
குழந்தை பிறந்தபோது பெயர் வைக்காமல் பிறப்பை பதிவு செய்திருந்தாலும், அதற்கு பிறகு பெயரை சேர்க்கலாம். பிறப்பை பதிவு செய்த நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெயரை இலவசமாக சேர்க்கலாம். அதற்கு பிறகு 15 ஆண்டுகளுக்குள் பெயரை சேர்க்க தாமதக் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்.
15 வருடங்களை கடந்த சில பழைய பதிவுகளுக்கும் தமிழக அரசு, பிரத்யேகமான கால அவகாசத்தை வழங்கியிருந்தது. அந்த அவகாசமும் கடந்த செப்டம்பர் 26ம் தேதியுடன் முடிந்துவிட்டது. அதனால் இப்போது 15 ஆண்டுகளை கடந்த பதிவுகளுக்கு பெயர் சேர்க்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இப்போதுள்ள நடைமுறையை உறுதி செய்ய வேண்டும்.
தவறு இருந்தால் திருத்தலாம்
குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அப்பா அல்லது அம்மா பெயரில் எழுத்துப் பிழை இருந்தால் திருத்தம் கோரலாம். பிறப்பை பதிவு செய்தபோதே பெற்றோர் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், அதை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். குழந்தையின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் தவறு இருந்தாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக பிறப்பு பதிவு செய்யப்பட்ட பகுதியின் பிறப்பு, இறப்பு பதிவாளரை அணுக வேண்டும். ஆவணங்களை சரிபார்த்த பிறகு பதிவாளர் உரிய முடிவு எடுப்பார். ஆனால் பெற்றோர் பிறகு தங்கள் பெயரை மாற்றிக்கொண்டால், அந்த மாற்றத்தை மட்டும் வைத்து குழந்தையின் பிறப்பு சான்றிதழிலும் பெயரை மாற்ற முடியாது. இதற்கென உள்ள தனி நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
ஆன்லைனில் பெறுவது எப்படி?
தமிழகத்தில் 2018 ஜனவரி 1 முதல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு விவரங்களை crstn.org வெப்சைட்டில் தேடி சான்றிதழை டவுன்லோடு செய்யலாம். ஒருவேளை பழைய பதிவு வெப்சைட்டில் கிடைக்காவிட்டால் பிறப்பு நடந்த இடத்துக்கான உள்ளாட்சி அலுவலகத்தை அணுக வேண்டும்.
குழந்தையின் பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் பெயர் போன்றவை சரியாக உள்ளனவா என்பதை பெற்றோர் சான்றிதழ் கிடைத்தவுடன் சரிபார்ப்பது நல்லது. பிறகு திருத்தம் செய்ய வேண்டிய நிலை வந்தால் கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம்...!!


Click it and Unblock the Notifications
