"நான் உங்கள பார்க்குறேன்.. தமிழ்நாடு வந்தா சொல்லுங்க” - வீர முத்துவேலுவிடம் போனில் சொன்ன ஸ்டாலின்
சென்னை: சந்திரயான் 3 விண்கல திட்டத்தின் இயக்குநர் வீர முத்துவேலை அலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்.
இன்று உலகமே இந்தியாவை வியந்து பாராட்ட காரணமாக அமைந்து இருக்கும் சந்திரயான் 3 நிலவு பயண வெற்றியின் பின்னால் இருப்பது வீர முத்துவேல் என்ற தமிழர்தான். சந்திரயான் 3 நிலவை தொட்ட பின்னர் திட்ட இயக்குநரான விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேலையே அழைத்து பாராட்டினால் இஸ்ரோ இயக்குநர் சோம்நாத்.

அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். "'அறிவியல் தமிழர்' வீரமுத்துவேல் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம்!" என்று குறிப்பிட்டு அலைபேசியில் பேசிய வீடியோவையும் முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். இருவரது அலைபேசி உரையாடலை பார்ப்போம்.
ஸ்டாலின்: நான் சிம். வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
வீர முத்துவேல்: நீங்க பேசுனது ரொம்ப சந்தோசம் சார்.
ஸ்டாலின்: சந்திரயான் விண்கலம் வெற்றிபெற்றது தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல, இந்தியாவுக்கே உலக அளவுல ரொம்ப பெருமை தேடி கொடுத்து இருக்கீங்க
வீர முத்துவேல்: ரொம்ப சந்தோசம் சார்.
ஸ்டாலின்: அப்புறம், விழுப்புரம் மாவட்டதுல இருக்கக்கூட உங்க அப்பாவின் பேட்டியை பார்த்தேன். ரொம்ப பெருமைப்பட்டு இருக்கிறார். நீங்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது தகவலை மட்டும் கொடுங்க. நான் உங்களை சந்திக்கிறேன்.
வீர முத்துவேல்: கண்டிப்பாக சார்.
ஸ்டாலின்: கட்டாயம் சந்திக்கலாம். எல்லோருக்கும் வாழ்த்து சொல்லுங்க.
வீர முத்துவேல்: நீங்க கால் பண்ணதுக்கு ரொம்ப சந்தோசம் சார். எல்லோரிடமும் சொல்கிறேன் சார். உங்களுடைய சர்வீஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சார்.
ஸ்டாலின்: நன்றி.. பெரிய விசயம்
வீர முத்துவேல்: நான் ரோவரை இப்போது வெளியில் எடுத்துக்கொண்டு இருக்கிறேன் சார். அதனால் அதிகம் பேச முடியவில்லை. கடந்த சில நிமிடங்களாகவே வேலைகளில் இருந்தேன். உங்க கிட்ட பேசிய ரொம்ப சந்தோசம் சார். நன்றி.
ஸ்டாலின்: தமிழ்நாட்டுக்கு வரும்போது சொல்லுங்க. மீட் பண்ணுவோம்.
வீர முத்துவேல்: நன்றி சார்.
'அறிவியல் தமிழர்' வீரமுத்துவேல் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம்!#Veeramuthuvel #Chandrayaan3#Ch3 pic.twitter.com/B87pQ4WQxM
— M.K.Stalin (@mkstalin) August 23, 2023
முன்னதாக இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், ''வெற்றிகரமாகத் சந்திரயான் - 3 தரையிறக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோவுக்கு பாராட்டுகள். நிலவில் தடம் பதிக்கும் 4 வது நாடாக இந்தியாவை நிலைநிறுத்தி வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பாடுபட்டு புதுமையை நிகழ்த்திய ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுகள். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய பாய்ச்சல்!'' என்று பதிவிட்டு இருந்தார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில் "சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது தமிழ்நாட்டிற்கு ஒரு மகத்தான சாதனை உணர்வைக் தருகிறது. மூன்று சந்திராயன் பயணங்களையும் மயில்சாமி அண்ணாதுரை, வனிதா மற்றும் தற்போது வீரமுத்துவேல் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் வழிநடத்தப்பட்டுள்ளன.
அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அறிவு நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டின் இளம் திறமையாளர்கள் இவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நமது இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் பங்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications