தேசிய கொடியை முதல்வர் ஸ்டாலின் தொட்ட நேரம்.. வெளியான சண்டை நிறுத்தம்! வங்கக் கடலை அதிர வைத்த கூட்டம்
சென்னை: பாகிஸ்தான் இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த நிலையில், பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி சென்னையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சரியாக 5 மணிக்கு தேசிய கொடியுடன் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பேரணியில் கலந்து கொண்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
இதில் தீவிரவாதிகள் தவிர்த்து பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என இந்திய ராணுவமும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் விளக்கம் அளித்து இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவின் தாக்குதல் போர் நடவடிக்கை தான் என்றும் அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என பாகிஸ்தான் கொக்கரித்தது.

எந்த நேரமும் இரு நாடுகளிடையே போர் ஏற்படலாம் என்ற சூழ்நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் சீனா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு பாகிஸ்தான் இந்தியா எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
அதே நேரத்தில் ரஷ்யா வழங்கிய பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. மேலும் பதிலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தது. இதற்கிடையே வியாழக்கிழமை இரவு நேரத்தில் பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதலை நடத்த தொடங்கியது.
இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்ததோடு, பாகிஸ்தானுக்குள்ளேயும் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இந்நிலையில், பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி இன்று சென்னையில் நடத்தப்படு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிதத்தார்.
பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பேரணியை நாளை மாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், மாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து திட்டமிட்டபடி பேரணி தொடங்கியது. தேசியக் கொடியை ஏந்திய படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியை தொடங்கி வைத்து நடந்து சென்றார். இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வைகோ உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள், பல்வேறு சமுதாயத்தினர், மாணவ மாணவிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் நடைபெற்ற பேரணியில் தேசியக்கொடியை கையில் ஏந்தி மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் பங்கேற்பு!#DMK pic.twitter.com/65oOz35Gvj
— DMK (@arivalayam) May 10, 2025
தொடர்ந்து பேரணி தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெற்றது. இந்த பேரணி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்பட்ட நிலையில், அதே நேரத்தில் தான் போர் நிறுத்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் சரியாக மாலை 5 மணிக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார். அதே நேரத்தில் தான் சென்னையில் பேரணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications