துபாய் துணை ஆட்சியாளர் ஷேக் ஹம்தான் மறைவுக்கு... மு.க.ஸ்டாலின் இரங்கல்..!
சென்னை: துபாய் துணை ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் தமிழகத்திற்குமான பிணைப்பு என்பது கடந்த கால் நூற்றாண்டை கடந்து மிக வலிமையாக திகழ்கிறது. இதற்கு தென்னிந்திய மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அங்கு பணியாற்றி வருவதும் ஒரு காரணம்.

இதனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகம் மற்றும் கேரள மாநில மக்கள் துபாயில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர். அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஆட்சியாளர் ஷேக் ஹம்தான் மறைவு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஷேக் ஹம்தான் மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக சார்பிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் தமிழர்கள் சார்பிலும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தெரிவித்த இரங்கல் குறிப்பை ஐக்கிய அரபு அமீரக திமுக செயலாளரும் நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூரை பூர்வீகமாக கொண்டவருமான எஸ்.எஸ்.மீரான் , துபாய் துணை ஆட்சியாளர் ஷேக் ஹம்தான் குடும்பத்தினரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரக திமுக சார்பில் ஷேக் ஹம்தான் மறைவு குறித்த நினைவஞ்சலி கூட்டமும் நடத்தப்படவுள்ளது. மறைந்த ஷேக் ஹம்தான் கடந்த 1971-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி அமைச்சராகவும், 1995-ம் ஆண்டு முதல் துணை ஆட்சியாளராகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.