மீண்டும் மீண்டும் புகழ்ச்சி.. தாங்க முடியவில்லை இனியும் தொடர்ந்தால் நடவடிக்கை: முதல்வர் கண்டிப்பு
மானியக் கோரிக்கையின் போது தன்னை புகழ்ந்து பேசினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தலைவர்களை புகழந்து பேசுவதில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் திமுக எம்எல்ஏக்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் திட்டமிடப்பட்டதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே முடிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். செப்டம்பர் 13ஆம் தேதிக்குள்ளாகவே அனைத்து துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.
சட்ட முன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தின்போது தலைவர்களை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டிப்பான வேண்டுகோள் விடுத்திருந்தார். நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களும் எம்எல்ஏக்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிக்கிறேன் என அவர் தெரிவித்திருந்தார்.

அமைச்சர்கள் புகழாரம்
முதல்வர் உத்தரவின் படி, தங்களது உரையை ஆரம்பிக்கும் முன்பு பெரியார், கலைஞர், ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதை அமைச்சர்கள் நிறுத்திக் கொண்டனர். நேற்று பேசிய எ.வ. வேலு,ராமனுக்கு அனுமன் போல, ராஜராஜ சோழனுக்கு ராஜேந்திர சோழன் போல திமுக ஆட்சியமைக்க முதல்வருக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழ்ந்தார்.

திராவிட கொள்கைகள்
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறைகள் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் முன் பேசிய அமைச்சர் எவ.வேலு, கே ஆர் ராமசாமி, பி வி நாராயாணசாமி, எஸ் எஸ் ராஜேந்திரன், எம் ஜி ஆர், மு.க.ஸ்டாலின் வழியில் திரையுலகத்தில் திராவிட கொள்கைகளை எடுத்துச் சொல்வதற்கும் நம்முடைய பிரச்னைகளையும் எடுத்துச் சொல்வதற்கும் நகைச்சுவை தென்றலாக உதயநிதி உலாவிக் கொண்டிருக்கிறார் என பேசினார்.

உந்து சக்தி
உதயநிதி ஸ்டாலின் என சொல்லும் போதெல்லாம் தங்களுக்கு எல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சி எனவும், திமுக திரையுலகில் பட்டுப்போய்விடுமோ என்று அஞ்சிய நிலையில், நமக்கு ஒரு திராவிட நடிகர் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் பேசினார். தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாத கிராமப்புற தொகுதிகளின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்து இன்று மேஜை தட்டும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக உந்து சக்தியாக இருந்தவர் என்றும் எ.வ வேலு தெரிவித்தார்.

சேப்பாக்கத்தில் வெற்றி
திரையுலகில் இருந்து புரட்சித்திலகம் எம்.ஜி.ஆர் முதலமைச்சரானது போல, மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகி, துணைமுதலமைச்சராகி முதல்வர் ஆக ஆகியுள்ளதாகவும் அந்த வழியில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆகியிருப்பதாகவும் அமைச்சர் எவ.வேலு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஸ்டாலின் கண்டிப்பு
சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என்று கூறிய ஸ்டாலின், நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிக்கிறேன் என்று கண்டிப்பாக கூறினார்.

மானியக்கோரிக்கை விவாதம்
இந்த நிலையில் இன்றைய தினம் திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் முதல்வரின் உத்தரவை மீறிவிட்டார். முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை மீறி அவர், பேரவையில் முதல்வரை புகழ்ந்து பேசினார். இதனால் கடுப்பான முதல்வர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏ ஐயப்பன் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடித்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.

எதற்கும் ஒரு லிமிட்
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் கண்டிப்பாக கூறினார். நேற்றே அவை நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என்று கூறினேன். எதையும் லிமிட் ஆக வைத்துக்கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியினரே புகழ்ச்சி
இது போன்ற ஒரு கண்ணியமிக்க சட்டசபையை நான் பார்த்ததில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பேசிய போது கூறினார். எதிர்கட்சியினரைப் பற்றி தவறுதலாக பேசினால் முதல்வர் ஸ்டாலினே மன்னிப்பு கேட்கிறார். தற்போது புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் கூறி கண்டிப்பாக கட்டளையிட்டுள்ளார் மு.க ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications