ஒவ்வொரு வாக்காளரையும் திமுகவினர் சந்திக்க வேண்டும்... மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!
சென்னை: ஒவ்வொரு வாக்காளரையும் திமுகவினர் சந்திக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தென் சென்னை திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

ஊழல் ஆட்சி
''இன்றைக்கு என்ன மாதிரியான ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது? அமைச்சர்கள் மட்டுமல்ல; அவர்களுக்கு எல்லாம் தலைவராக இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி என அனைவருமே அரசு பணத்தைச் சுருட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். தினமும் முதலீடு.....முதலீடு என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் வந்த முதலீடுகள் எவ்வளவு என்று கேட்டால் இதுவரை கணக்குச் சொல்ல முடியவில்லை?''

பயணம் தோல்வி
''எத்தனை புதிய தொழிற்சாலைகள் என்று கேட்டால், விவரமே தெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், அதற்கும் பதில் இல்லை. முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தோல்வி. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தோல்வி. முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முதலீடுகளைப் பெறுவதற்காக போன வெளிநாட்டுப் பயணம் தோல்வி.''

டிசம்பர் 18-ம் தேதி
''இன்றைக்கு நாடே விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டிருக்கிறது. டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே டிராக்டர்களுடன் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இப்போது கூட வருகின்ற 18-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், நானும், நமது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்.''

புதிய வேளாண் சட்டம்
''எதற்காக? நம் நாட்டின் விவசாயிகளைக் காப்பாற்றவே நாம் இந்த அளவிற்கு ஜனநாயக ரீதியில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே தயவு செய்து விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள் என்று கோரிக்கை வைக்கிறோம். மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வராதீர்கள் என்று கோரிக்கை விடுக்கிறோம்.''

ஆதரிக்கிறார்
''ஆனால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார்? விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்று கூறிய பா.ஜ.க.வை ஆதரிக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய விரும்பும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து நிற்கிறார்.''

அரண்டு மிரண்டு
''பா.ஜ.க.வை முறைத்தால், எந்த நேரத்தில் வருமான வரித்துறை ரெய்டு வரும், எந்த நேரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு வரும், எந்த நேரத்தில் சி.பி.ஐ. வழக்கு வரும் என்று தெரியாது. ஆகவே அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.''

தொழில் வளர்ச்சி
''தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் நாம் பார்க்க வேண்டும். அ.தி.மு.க. அரசின் ஊழல்களை - எடப்பாடி பழனிசாமி அவர்களின் தோல்விகளை - பா.ஜ.க. தமிழகத்திற்குச் செய்துள்ள பச்சைத் துரோகத்தைப் பட்டியலிடுங்கள்! ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை கிடைக்க, ஒவ்வொரு வீட்டிலும் வருமானம் பெருக, ஒவ்வொரு மாவட்டமும் தொழில் வளர்ச்சியில் ஒன்றையொன்று மிஞ்சிச் செல்ல - அ.தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.''












Click it and Unblock the Notifications