ஸ்டாலின் எதிரே பெருசா நிற்கும் சவால்.. சொன்னதை செய்யாமல் எப்படி ஓட்டு கேட்க போவது? தீவிர ஆலோசனை
சென்னை: நிதி நெருக்கடி காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நிலுவையில் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையும் , தமிழகம் முழுவதும் நகர்ப்புற தேர்தலையும் செப்டம்பர் 15-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அண்மையில் கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.
6 மாத கால அவகாசம் கேட்டும் அதனை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தேர்தல் வாக்குறுதிகள்
இது குறித்து உயரதிகாரிகளுடன் கோட்டையில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியபோது, ''தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். குறிப்பாக, நீட் தேர்வு ரத்து, கூட்டுறவு வங்கிகளில் உள்ள 5 சவரன் நகைகளுக்கான கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உறுதிப்பணம், கல்வி கடன் ரத்து , மாதந்தோறும் மின்ரீடிங் எடுக்கும் முறை அமல்படுத்துதல் உள்ளிட்டவைகள் தேர்தலில் எதிரொலிக்கும்.

பெண்கள் ஆதரவு
இதில், நகை கடன் தள்ளுபடியும், இல்லத்தரசிகளுக்கு உறுதி பணமும் பெண்களை சார்ந்தது. இதனை நிறைவேற்றாமல் தேர்தலை எதிர்கொள்வது பெண்களின் ஆதரவை இழக்க நேரிடலாம். அதேபோல, கல்வி கடன் ரத்து மற்றும் நீட் தேர்வு ரத்து என்பது மாணவர்கள் மற்றும் இளம் பட்டதாரிகள் தொடர்பானது. இதனை நிறைவேற்றாமல் தேர்தலை எதிர்கொள்வது அவர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

மின்சார பிரச்சினை
மின் ரீடிங் மாதந்தோறும் கணக்கெடுப்பு என்கிற வாக்குறுதி நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு. அதையும் நிறைவேற்றாமல் தேர்தலை சந்தித்தால் நடுத்தர மக்களின் அதிருப்தி திமுகவுக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம். பெண்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகிய முக்கிய 3 தரப்பின் ஆதரவும் திமுகவுக்கு இருந்ததால்தான் அதாவது சொல்வதை செய்வார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததால் தான் திமுகவால் வெற்றிபெற முடிந்தது. ஆனால், இப்போது அரசு எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி, கடன் சுமைகளில் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம்'' என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

6 மாதம் ஒத்தி வைக்கலாம்
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தேர்தலை சந்திப்பதை விரும்பாத ஸ்டாலினும், தேர்தலை 6 மாத காலம் ஒத்தி வைத்தால் ஒரு வகையில் கொஞ்சம் மூச்சு விட வாய்ப்புக் கிடைக்கும். அதன்பிறகு சில கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு தேர்தலை எதிர்கொள்ளலாம். அதற்கு ஏதேனும் வழிகள் இருக்கிறதா ? என்று கேட்டிருக்கிறார்.

சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை
தேர்தலை நடத்துவதற்கு இவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்றும், முந்தைய அரசால் தமிழக அரசு மிக மோசமான நிதி நெருக்கடியில் இருக்கிறது என்றும், அதனால் தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துப் பார்க்கலாம் என அதிகாரிகள் தரப்பிலிருந்து யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு மனுவை தாக்கல் செய்தால் நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவை பெற முடியுமா? என்று சட்ட நிபுணர்களுடன் அதிகாரிகள் ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications